70 ஆண்டு அரசியல் பயணத்தில் மைல்கல்!- சாதித்துக் காட்டிய தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

70 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக, அவரது தொண்டராக தன் வாழ்வைத் தகவமைத்துக் கொண்ட தமிழ் மகன் உசேன், இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 70 ஆண்டு அரசியல் வாழ்வில் அவருக்கு இன்று மிகவும் நிறைவான நாள் என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள் குமரிமாவட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் ரசிகர்கள் காமதேனுவிடம் கூறுகையில், “ஆரம்ப காலத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த தமிழ்மகன் உசேன், குமரி மாவட்ட எம்ஜிஆர் ரசிகர் மன்ற அமைப்பாளராகவும் இருந்தார். எம்ஜிஆரே இவருக்காக கேட்டு, திமுக ஆட்சிக்காலத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார். பயணிகளை ஏற்றிக்கொண்டு, தமிழ்மகன் உசேன் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் அருகில் சாலையில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். தமிழ்மகன் உசேன் பேருந்தை நிறுத்திவிட்டு விசாரித்தார். திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டுவிட்டார் என கூடியிருந்தவர்கள் சொல்ல, உடனே தன் ராஜினாமா கடிதத்தை எழுதி நடத்துநரிடம் கொடுத்துவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் உசேன். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும்வரை அவருடனேயே முகாமிட்டு இருந்தவரை, குமரி மாவட்ட அதிமுக அமைப்பாளர் பொறுப்பு கொடுத்து அனுப்பி வைத்தார் எம்ஜிஆர்!

ஒருசமயம், எம்.ஜி.ஆருக்கும் இவருக்கும் சின்ன கருத்து வேறுபாடு வந்தது. அப்போது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் எம்.ஜி.ஆரே, உசேனை இழக்க மாட்டேன் எனக் கடிதம் எழுதினார். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக இருந்து தொடர்ந்து எம்.ஜி.ஆர் புகழ் பாடி வந்தார். வயதால் 85 கடந்துவிட்டாலும், நல்ல நினைவாற்றலோடு எம்.ஜி.ஆர் காலத்து அனுபவத்தை கண்முன்பாகக் கொண்டு வந்து நிறுத்துவார். நல்ல கட்சிப் பேச்சாளரும் கூட! இளைஞர்களில் பேச்சுத்திறமை இருப்போரை பார்த்துவிட்டால் கூப்பிட்டுப் பேசக் களம் அமைத்துக் கொடுப்பார்.

தமிழ்மகன் உசேன் இஸ்லாமியர். குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ஒரு யூனியன் சேர்மனாக வரும் அளவுக்குக் கூட எந்தப் பகுதியிலும் பெரும்பான்மை கிடையாது. அதனாலேயே அவருக்கு மக்கள் பிரதிநிதித்துவ பதவி எதற்குமே வரமுடியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கும், தமிழ் மகன் உசேனுக்கும் எவ்வளவு நட்பு இருந்திருந்தால் அவரை குமரிமாவட்டத்தின் முதல் மாவட்ட அமைப்பாளர் ஆக்கியிருப்பார் என நினைத்துப் பாருங்கள். 70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இது அவருக்கு ஒரு மைல்கல்” என நெகிழ்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in