`என்னை காயப்படுத்திவிட்டனர்; என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும்'- ஆளுநர் தமிழிசை உருக்கம்

புதுக்கோட்டையில் தமிழிசை சௌந்தரராஜன்
புதுக்கோட்டையில் தமிழிசை சௌந்தரராஜன்

"இது என் நாடு, நான் தமிழச்சி, தமிழ்நாட்டை சேர்ந்தவள். என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக கூறினார்.

தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றை திறந்து வைப்பதற்காக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பொதுமக்கள் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் வைத்துள்ளார். இதை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நாட்டில் உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. சமூக நீதியை பற்றி பேசி வரும் பலர் இந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கை குறித்து நான் சில நாட்களுக்கு முன்பு பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் சொன்னதை திரித்து, ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள் என நான் கூறியதாக திரித்து பேசப்பட்டுள்ளது. இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது, வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றே கூறினேன். ஆனால் தமிழிசையை, இந்திசை என்று இணையத்தில் பதிவிட்டு மனதை காயப்படுத்தி வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் அதிகார நாளேடான ஒரு பத்திரிகையில், தமிழகத்தில் தமிழிசை ஏன் வாலை ஆட்டுகிறார் என்று கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதைப் பற்றிப் பேச எனக்கு முழு உரிமை உள்ளது. என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் தமிழ் இருக்கிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதில், என்னுடைய பங்கு எப்பொழுதும் இருக்கும். இது என் நாடு, நான் தமிழச்சி, நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள். என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும்.

நாம் கம்பரையும் போற்ற வேண்டும், திருவள்ளுவரையும் போற்ற வேண்டும். கம்ப ராமாயணத்தையும் போற்ற வேண்டும். கம்பர் ராமனை பற்றி பேசியிருப்பதால் தான் தமிழ்நாட்டில் மறக்கடிக்கப்பட்டு விட்டார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். அது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனக்கும் முதலமைச்சருக்கும் எந்த விதமான ஈகோ பிரச்சினையும் கிடையாது.

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவையில்லை. அதை மதிக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. அரசியல் அமைப்பில் ஆளுநருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவையே அரசியல் ஆக்குகிறார்கள். அப்படி ஆக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. மாணவர்களுக்கு நல்லதை விதையுங்கள்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in