தமிழிசை ஏற்பாடு செய்த ஜூம் மீட்டிங்... ஆபாச படம் தெரிந்ததால் அலறியடித்து ஓடிய பெண்கள்!

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

ஜூம் மீட்டிங்  மூலம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குகேட்டபோது திடீரென ஆபாசப் புகைப்படங்கள் வெளியானதால் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மக்களை நேரில் சந்தித்து வாக்குகேட்கும் அவர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் வகையில் ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இணையவழி சந்திப்புக் கூட்டம் நேற்று இரவு நடந்தபோது வாக்காளர்கள் பல்வேறு குறைகளை அவரிடம் தெரிவித்திருந்தனர். அவரும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்தநிலையில் யாரோ விஷமிகள் ஆபாச புகைப்படங்களை அதில் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.  இந்த நிலையில் இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் வருத்தமும் அதிர்ச்சியும் கலந்த விளக்கம் அளித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

" அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. அதனால் இணையவழியில் சந்திக்கும் வகையில் ஜூம் (Zoom) மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். அது குறித்தும் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

மீட்டிங் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளரும், வாக்காளர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்காத வகையிலும், நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியினர் இதைச் செய்தனர்.

குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை இதற்கு நான் நேரடியாக குற்றம் சுமத்துகிறேன். இது கேவலமான அரசியல். இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது. பெண்கள் இணையவெளியில் சுதந்திரமாக தமிழகத்தில் பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்.

அரசியலைத் தூய்மைப்படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது அவசியம். இந்த அதிர்ச்சிகர செயலுக்கு நான் வருந்துகிறேன். நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்' என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சார திட்டங்கள் தெரியாது. ஆபாச புகைப்படங்களை வெளியான சம்பவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஷமிகள் செய்து இருக்கலாம். அல்லது தமிழிசையின் பிரச்சார பிளான் நன்றாக தெரிந்தவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று பாஜக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in