சூப்பர் முதல்வரா தமிழிசை?

உதாசீனப்படுத்தப்பட்டாலும் ஒன்றும் செய்யமுடியாத ரங்கசாமி!
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை சக அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர், சாதாரணமாக இடது கையால் தள்ளிவிட்டுவிட முடியுமா? அப்படிச் செய்தால் அதன்பிறகு என்ன நடக்கும்? - இந்தக் கேள்விகளுக்கான பதிலில் இருக்கிறது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் தற்போதைய நிலைமை.

அண்மையில் புதுச்சேரியில் வில்லியனூர் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அதுசமயம் அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலர் விஜயகுமார், ஆளுநருக்கும் நமச்சிவாயத்துக்கும் வழி ஏற்படுத்தும் வகையில் ரங்கசாமியை தனது இடதுகையால் ஓரமாகத் தள்ளிவிட்டார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகச் சுற்றியது.

முதல்வரை தள்ளிவிட்ட உதவி ஆய்வாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினார்கள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. காரணம், அமைச்சர் நமச்சிவாயம் ஆளுநரின் அபிமானத்தைப் பெற்ற பாஜககாரர். அவரது பாதுகாவலரை மாற்றும் அதிகாரம் ரங்கசாமியிடம் இல்லை. எனினும் சர்ச்சைகள் நீடித்ததால், விஜயகுமார் காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டதாக ஆளுநர் தமிழிசை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.

இப்படி, தன்னை பொது இடத்தில் உதாசீனம் செய்பவர்கள் மீதுகூட நடவடிக்கை எடுக்க முடியாதவரால் எப்படி அரசாங்கத்தை சுதந்திரமாக நடத்த முடியும் என்று கேட்கிறார்கள் புதுவை மக்கள். அதைப்பற்றி ரங்கசாமி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போது பெரும்பாலான அரசு விழாக்கள் ஆளுநர் தலைமையில் தான் நடக்கிறது. அதிலெல்லாம் பாஜக அமைச்சர்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பத்தோடு பதினொன்றாக அவற்றில் கலந்துகொள்கிறார் முதல்வர் ரங்கசாமி. அண்மையில் ஆளுநர் தலைமையில் நடத்தப்பட்ட யோகா சம்பந்தப்பட்ட விழா ஒன்றுக்கு ரங்கசாமிக்கே அழைப்பே இல்லை.

ரங்கசாமி மட்டுமல்ல... அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகிறார்கள். திருநள்ளாறு கோயில் தேரோட்டம் சமீபத்தில் நடைபெற்றது. காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர்கள் தான் இந்தத் தேரோட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. ஆனால், இம்முறை அங்குள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கு முறைப்படி அழைப்பு இல்லை. சம்பிரதாயத்துக்கு அழைப்பிதழை அனுப்பினார்கள்.

அதைப் பெரிதுபடுத்தாமல் அவர் தேரோட்டத்தை தொடங்கி வைக்க கிளம்பி வந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே பாஜகவை சேர்ந்த சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு தேரோட்டத்தை தொடங்கத் தயாராகிவிட்டார்கள். அமைச்சரை பெயரளவில் வரவேற்று வடம்பிடிக்க வைத்தார்கள். அந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி, காரைக்கால் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டாதது விவகாரமானது.

சென்னையிலிருந்து சுற்றுலா கப்பலை அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அது புதுச்சேரிக்கு வந்தால் சுற்றுலாப் பயணிகளால் மாநிலத்துக்கு வருமானம் கிடைக்கும் என்றபோதும் அது திமுக தலைவரால் துவக்கி வைக்கப்பட்டது என்பதால் அதற்கு ஒரு முட்டுக்கட்டை போடவிரும்பியது பாஜக. அதனால், “புதுவை அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை, அந்தக் கப்பலுக்கு அனுமதி இல்லை” என்று ஆளுநர் தமிழிசை முந்திக்கொண்டு அறிவித்தார். இதில் முடிவு எடுக்க வேண்டிய முதலமைச்சர் ரங்கசாமி, கப்பல் வந்தால் மாநிலத்துக்கு நன்மை என்று தெரிந்தும்கூட மௌனியானார்.

இப்படி எல்லா விவகாரங்களிலும் தமிழிசையே அதிகாரம் செலுத்துவதால் முதல்வருக்குரிய எந்த ஒரு செயல்பாடும் ரங்கசாமியிடம் தற்போது இல்லை. அவர் விரும்பும் மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழிசை இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதையெல்லாம் முதல்வர் ரங்கசாமியால் பேசமுடியாவிட்டாலும் முன்னாள் முதல்வரான நாராயணசாமி செல்லுமிடமெல்லாம் இதையெல்லாம் பொதுவெளியில் போட்டு உடைக்கிறார்.

’’புதுச்சேரியின் சூப்பர் முதல்வராக தமிழிசை செயல்படுகிறார். அரசின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் தலையிட்டு வருகிறார். ரங்கசாமி 'டம்மி' முதல்வராக இருக்கிறார். தலையாட்டி பொம்மையாக இருக்கிறார். பெஸ்ட் மாநிலமாக இருந்த புதுச்சேரி 'வொர்ஸ்ட்' மாநிலமாக மாறிவிட்டது. இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ரங்கசாமி முதல்வராக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்” என்று நச் கொடுக்கிறார் நாராயணசாமி.

தெலங்கானா மாநிலத்துக்கும் தமிழிசைதான் ஆளுநர் என்றாலும்கூட அவர் பெரும்பாலும் தெலங்கானாவில் இருப்பது இல்லை. அங்கே முதல்வர் சந்திரசேகர்ராவ் அதிகாரமிக்க முதல்வராக செயல்படுகிறார். அதனால் தமிழிசையின் ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகவில்லை. அதனால் புதுச்சேரியில் இருந்து கொண்டு முதல்வரின் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். யார் முதல்வர் என்பதில் மக்களுக்கே சந்தேகம் வரும் அளவுக்கு ஒரு சூப்பர் முதலமைச்சராகவே தமிழிசை செயல்டுகிறார் என்பது தான் உண்மை. அரசின் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிசையே வெளியிடுகிறார். திட்டங்களையும் அவர் தான் துவக்கி வைக்கிறார். அதில் ரங்கசாமி கலந்து கொண்டாலும் அவருக்கான முக்கியத்துவங்கள் கிடைப்பதில்லை.

இதுதொடர்பான விமர்சனங்கள் வெளியில் வேறு மாதிரியாக இருந்தாலும் தமிழிசை அதற்கு வேறு மாதிரியான விளக்கம் தருகிறார். ”ஆளுநரும் முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம். ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலங்கானா மற்றொரு உதாரணம்’’ என்ற தமிழிசையின் தன்னிலை விளக்கமே போதும் ரங்கசாமியின் தற்போதைய நிலையைச் சொல்ல.

நாராயணசாமி
நாராயணசாமி

ரங்கசாமியையும், அவரது அமைச்சர்களையும் டம்மியாக்கும் வேலைகளை கச்சிதமாகச் செய்யும் தமிழிசை, அதெல்லாம் அவர்களைக் காயப்படுத்தாத அளவுக்கும் பார்த்துக் கொள்கிறார். முதல்வரை அண்ணன் என்று அடிக்கடி அன்பாக அழைத்துப் பேசுவதும் அதில் ஒரு உத்தி. இதனால் தமிழிசையை நேரடியாக எதிர்க்க முடியாமலும் சில சமயம் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறார் ரங்கசாமி.

இதெல்லாமே தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வராக்கி புதுச்சேரியில் நேரடியாக தங்களது அரசை நிறுவும் திட்டத்தின் பாஜகவின் செயல்திட்டம் தான் என்ற பேச்சும் ஓடுகிறது. அப்படி ஒரு சூழல் அமைந்தால் என்.ஆர். காங்கிரஸையும் அதன் எம்எல்ஏ-க்களையும் பாஜகவில் கரைத்துவிட்டு, அதற்கு பிரதிபலனாக ரங்கசாமியை எங்காவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக அமர்த்தி அவருக்கு அரசியலில் நிரந்தர ஓய்வு கொடுப்பதும் பாஜகவின் அரசியல் அஜெண்டாவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்.ஆர்.காங்கிரஸை பலவீனப்படுத்தும் அதேநேரத்தில் பாஜகவை பலப்படுத்தும் வேலைகளையும் தமிழிசை மறைமுகமாகச் செய்கிறார். அண்மைக்காலமாக கோயில் மற்றும் இந்து மதம் சார்ந்த பல்வேறு விழாக்கள் புதுவையில் நிறைய நடக்கிறது. அதிலெல்லாம் தமிழிசை கட்டாயமாகக் கலந்து கொள்கிறார். இதற்கெல்லாம் ரங்கசாமிக்கு அழைப்பு கொடுக்கப்படுவதில்லை.

இப்படி, மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வர் ரங்கசாமியை அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல, மக்களிடமிருந்தும் தள்ளிவைக்கும் வேலைகளையும் கவனமாகச் செயல்படுத்தி வருகிறார் தமிழிசை. இத்தனையும் சகித்துக் கொண்டு இன்னமும் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டுமா என்பதே புதுச்சேரி மக்களில் பெரும்பான்மை யானவர்களின் கேள்வியாக இருக்கிறது.

நியாயமான கேள்வி தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in