
ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசுடன் உரசல் போக்கு தொடர்வதன் மத்தியில், தனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஐயம் எழுப்பியுள்ளார் மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தமிழகம், கேரளம் பாணியில் தெலங்கானாவிலும் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே உரசல் போக்கு தொடர்கிறது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அனுப்பும் மசோதக்கள் பலவற்றையும் பரிசீலித்து ஒப்புதல் வழங்காது இழுத்தடிப்பதாக, கவர்னருக்கு எதிராக ஆளும் கட்சியினர் குற்றப்பட்டியல் வாசிக்கின்றனர். மசோதா தொடர்பாக ராஜ் பவன் எழுப்பும் ஐயங்கள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அவற்றுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்கும் என்று சாதிக்கிறார் தமிழிசை. மேலும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது என்றும் கேசிஆர் ஆதரவாளர்களுக்கு பதிலடி தந்து வருகிறார்.
தெலங்கான பல்கலைக்கழகங்களின் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ஒரு சில விவகாரங்களில் கவர்னர் அளிக்கும் கவனமும் வேகமும் மக்கள் நலத்திட்டங்களுக்கான மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் இல்லை என்கின்றனர் ஆளும் கட்சியினர். இத்தோடு ஆளும்கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் பாஜக புள்ளிகள் வளைக்க முயன்றது தொடர்பாக கவர்னரையும் கேசிஆர் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியதில் தமிழிசை உஷ்ணமானார். அந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்ததோடு, தனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகிப்பதாகவும் ஒரு அதிரடி குற்றச்சாட்டை இன்று(நவ.9) வீசியுள்ளார்.
கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனின் இந்த குற்றச்சாட்டு தெலங்கனாவுக்கு அப்பாலும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் கவர்னர் - முதல்வர் இடையிலான மோதலில் அடுத்த கட்டம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.