ஓராண்டுக்கு பிறகு ரஜினியுடன் தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு!- என்ன காரணம்?

ஓராண்டுக்கு பிறகு ரஜினியுடன் தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு!- என்ன காரணம்?

நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் களமிறங்குவார் என்று அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ரஜினி. அதில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று கூறியிருந்தார் ரஜினி. மேலும் அதே தேதியில், "அதிகாரபூர்வ அறிவிப்பு. ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று ரஜினி அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரஜினிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய ரஜினி, 2020-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்" என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அர்ஜுனமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து, இனி நான் அரசியல் பக்கமே வர மாட்டேன் என்று தமிழருவி மணியன் அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், சுமார் ஒரு வருடத்துக்கு பிறகு ரஜினியை மீண்டும் சந்தித்துள்ளார் தமிழருவி மணியன். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி காந்த் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். அவரது உடல் நிலை குறித்து தமிழருவி மணியன் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in