'தமிழைத்தேடி' பரப்புரை பயணம்: மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் இருந்து மதுரைக்கு தொலைந்த தமிழைத் தேடி 8 நாட்கள் பயணம் செல்ல உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " உலகின் மூத்த மொழியான தமிழின் இனிமை, பழமை, பெருமைகள், சிறப்புகள் ஆகியவை குறித்து மகிழ்ச்சி அடைய ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இன்று தமிழின் இருப்பு எவ்வாறு உள்ளது என்பதை நினைக்கும் போது தான் பெரும் கவலையும், வருத்தமும் வாட்டுகின்றன.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க சட்டம் இயற்றி 16 ஆண்டுகளாகியும் கூட தமிழ் இன்னும் கட்டாயப் பாடமாக இல்லை.

தமிழ்நாட்டில் தமிழின் இன்றைய நிலைக்கு ஏதேனும் ஒரு தரப்பை மட்டுமே குறை கூறுவதில் பயன் இல்லை. அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு வரை அனைவரும் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மொழியில் பேச வேண்டும்; தமிழில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழராய் பிறந்த அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி,  ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிப்ரவரி 21-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கும் இந்த பரப்புரை பயணம்,  மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிப். 28-ம் தேதி நிறைவடையும்.

தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வித்துறை, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து  தரப்பினரும் இந்த பரப்புரை பயணத்தில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in