உள்ளாட்சித் தேர்தல்... உரிமை கோரும் கட்சிகள்!

உள்ளாட்சித் தேர்தல்... உரிமை கோரும் கட்சிகள்!

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. 2019-ல் இருந்து தொடரும் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணி உள்ளது. இதுவரை விட்டதையெல்லாம் ஓரளவுக்காவது பிடிக்கும் முயற்சியில் அதிமுக கூட்டணி உள்ளது. இந்த இரு கூட்டணிகளைத் தவிர்த்து பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக போன்ற கட்சிகள் கவுரவமான வெற்றியை எதிர்நோக்கியிருக்கின்றன. வேட்புமனுத் தாக்கல் ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கட்சிகளுக்குள் நடக்கும் காட்சிகள் என்ன?

திமுக கூட்டணி

திமுக தலைமையில் 2019 மக்களவைத் தேர்தல், 2019-21 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற தெம்போடு ஆளுங்கூட்டணி தேர்தலைச் சந்திக்கிறது. 2011 உள்ளாட்சித் தேர்தல் திமுகவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 90 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது. 2011-ல் 10 ஆக இருந்த மேயர் பதவிகள் இப்போது 21 ஆக அதிகரித்துள்ளன. 1996, 2006-ல் திமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை ஆறாக இருந்தபோதே 2 மேயர் பதவிகளை முறையே தமாகா, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி திமுக தாராளம் காட்டியது. ஆனால், அது கருணாநிதி காலம். ஸ்டாலின் காலத்தில் கூட்டணி கட்சிகளுக்குக் கிள்ளிதான் சீட்டுகளை திமுக ஒதுக்கிவருகிறது. மேலும் மேயர், சேர்மன் பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்பதால், கவுன்சிலர்கள் எண்ணிக்கைதான் வெற்றியைத் தரும்.

எனவே, மேயர், சேர்மன் பதவிகளை அதிகமாகக் கைப்பற்றும் நோக்கில் திமுக காய்களை நகர்த்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் போலவே, குறைந்த இடங்களை ஒதுக்கும் முடிவோடுதான் மாவட்டச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு முழுமையாக வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்துவிட்டுத்தான் பேச்சுவார்த்தைகளை மா.செ-க்கள் நடத்தி வருகிறார்கள். கொடுக்கும் இடங்களைக் கூட்டணி கட்சிகள் வாங்கிக்கொள்ளாவிட்டால், மாவட்ட அளவில் கூட்டணியை முறித்துக்கொள்ளும் மூடில்தான் கூட்டணி கட்சிகளை அவர்கள் அதிரடித்து வருகிறார்கள்.

ஆனால், கடந்தகாலம் போல மேயர் பதவிகளைக் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு என மேயர் பதவிகளைக் குறிவைத்துள்ளது. அதற்கேற்ப அதிக வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது. இதேபோல, செல்வாக்குள்ள 20 நகராட்சி சேர்மன் பதவிகளைக் கைப்பற்றும் வகையில் காங்கிரஸ் திமுகவிடம் வார்டுகளை எதிர்பார்க்கிறது. ஒட்டுமொத்தமாக 10 சதவீதத்துக்கும் அதிகமான உள்ளாட்சிப் பதவிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இதுதொடர்பாக பெயர் குறிப்பிடாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் 10 சதவீத இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களையாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். அதற்குக் குறைவாக ஒதுக்கினால், கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும்” என்கிறார் அந்த நிர்வாகி. இந்த விஷயத்தில் ஸ்டாலின், துரைமுருகன் எடுக்கும் முடிவைப் பொறுத்தே காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக நாகர்கோவில் மேயர் பதவி வழங்கப்படலாம் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் மதிமுக, சிவகாசி மேயர் பதவி மீது கண் வைத்திருக்கிறது. தங்களுக்கு சிவகாசி மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று வைகோவே நேரடியாக திமுக தலைமையிடம் கேட்டிருப்பதாக மறுமலர்ச்சி தோழர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி சேர்மன் உட்பட ஓரிரு சேர்மன் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள். விசிக வேலூர் மாநகராட்சி பதவியை எதிர்பார்க்கிறது என்றாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவே. பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி சேர்மன் பதவிகள் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை எப்போதும் மேயர் பதவிகளைக் கேட்டதில்லை. அக்கட்சி செல்வாக்கான நகராட்சிகளை ஒதுக்கினால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளன.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குக் கட்சிகளின் தலைமை பேசி சீட்டுகளை ஒதுக்கிக்கொண்டன. ஆனால், தற்போது மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதால், கூட்டணி கட்சிகளைத் திருப்திப்படுத்தும் சூழலில் திமுக உள்ளது. ஆக, பிரச்சினையில்லாமல் இடங்களை ஒதுக்குவதில்தான் திமுகவின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

அதிமுக கூட்டணி

2018-ம் ஆண்டிலிருந்தே ஒருங்கிணைந்த அரசியல் கூட்டணியாக திமுக கூட்டணி தொடரும் நிலையில், அதிமுக கூட்டணி என்பது சீசனுக்கு வரும் பறவைகள் போல ஆகிவிட்டது. தேர்தல் கூட்டணியாக மட்டுமே அதிமுக கூட்டணி இருந்துவருகிறது. கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக ஆகியவை இப்போது இல்லை. பாஜக, தமாகா என இரு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்தாலும், நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்றும் திமுக Vs பாஜக என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறது பாஜக.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, டிசம்பர் மாதத்திலேயே தங்களுடைய எண்ணத்தை அதிமுகவிடம் பாஜக வெளிப்படுத்தியிருக்கிறது என்கின்றன கமலாலய வட்டாரங்கள். தென் மாவட்டம், மேற்கு மாவட்டங்களில் உள்ள மேயர், சேர்மன் பதவிகளை அதிகம் ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் பாஜக வைத்திருந்தது. இதேபோல கணிசமாக வார்டுகளையும் ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் அதிமுகவிடம் கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 50 வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பாஜக நிபந்தனை வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள் கமலாலயத்தில்.

ஆனால், “சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேசும் ஒரு எம்எல்ஏ கூட அதிமுகவில் இல்லை” என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் பேசியது அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுகவினர் சூடாகப் பதிலடி கொடுக்க, விவகாரம் தனலாகச் சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்துக்குப் பிறகு, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்ற எண்ணமும் பாஜக தலைவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மேலும் கட்சியின் பலம் எப்படி உள்ளது, வாக்கு வங்கி உயந்திருக்கிறதா என்பதை அறிய பாஜகவில் உள்ள தலைவர்கள் தனித்து போட்டியிடும் யோசனையை முன்வைத்திருக்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் எத்தனை சதவீத இடங்களை பாஜக கோரும் என்று பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “நாங்கள் ஏன் அப்படி ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும்? இந்தத் தேர்தலிலாவது பாஜக தனித்து போட்டியிட வேண்டும். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இதே கருத்தை கட்சியின் முக்கிய தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்கள். தேர்தலில் அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு மாறாது என்று உறுதியாக நம்புகிறோம். எனவே, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் எங்கள் கட்சியைப் பலப்படுத்த விரும்புகிறோம்” என்று அந்த நிர்வாகி பூடகமாகப் பேசினார். “என்றாலும் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என்றும் டிரேட் மார்க் வார்த்தையும் உதிர்த்தார் அந்த பாஜக நிர்வாகி. எனவே, பாஜக மதில்மேல் பூனையாக இல்லை. 2024 மக்களவைத் தேர்தல்தான் பாஜகவுக்கு முக்கியம் என்பதால், அதையொட்டியே அக்கட்சித் தலைமை முடிவெடுக்கலாம்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா தலைவர் வாசன், தனக்கு மாநிலங்களவை எம்பி பதவியை அதிமுக வழங்கியது முதலே, அக்கூட்டணிக்கு விசுவாசமாக மாறிவிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் சொன்னதுபோலவே, “எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல; வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவதே முக்கியம்” என்று சொல்லிவிட்டார். எனவே, அதிமுக கொடுக்கும் இடங்களை மனமுவந்து தமாகா பெற்றுக்கொள்ளும் என்பதுதான் வாசன் உணர்த்தும் சங்கதி.

பாமக, தேமுதிக

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கும் முயற்சியில், மீண்டும் தனிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கும் பாமக, கடந்த அக்டோபரில் நடந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 47 பதவிகளை மட்டுமே வென்றது.140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்றைக்கூட வெல்லவில்லை. அதுவும், பாமக வலுவான அடித்தளத்தைக் கொண்ட வட மாவட்டங்களில் அக்கட்சியால் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பரிமளிக்க முடியவில்லை.

இப்போது, தேர்தலை எதிர்கொள்ளும் 21 மாநகராட்சிகளில் 7 வட மாவட்டங்களில் உள்ளன. இதேபோல், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு வட மாவட்டங்களில்தான் வருகின்றன. எனவே, பாமக எந்த அளவுக்கு இத்தேர்தலில் செயலாற்றும் என்ற கேள்வி உள்ளது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் பாமக தேர்தலை எதிர்கொள்வதால், அக்கட்சியின் சொந்த பலம் மீண்டும் வெளிப்படக்கூடும்.

விஜயகாந்த் உடல்நலன் பாதிக்கப்பட்ட பிறகு கடுமையாகத் தேயத் தொடங்கிய தேமுதிக, இன்று தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதிமுக, அமமுக முன்பு கூட்டணி அமைத்த கட்சிகளுடன் இந்த முறை தேமுதிகவுக்கு கூட்டணி அமையவில்லை. எதுவும் தேறாத நிலையில், நீண்டநாள் கழித்து தனித்துப் போட்டியிடும் ஃபார்முலாவுக்கு அக்கட்சி திரும்பியிருக்கிறது. கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டபோதே, 8,299 பேரூராட்சி வார்டுகளில் 395-ல் வெற்றி, 3697 நகராட்சி வார்டுகளில் 119-ல் வெற்றி; 820 மாநகராட்சி வார்டுகளில் 8 பேர் வெற்றி என சொற்பமாகத்தான் தேமுதிக வென்றது. அப்போது, தேமுதிக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தது. விஜயகாந்த் நல்ல உடல்நிலையில் இருந்தார். தேமுதிக பலவீனமடைந்துவிட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தவே, இப்போது அக்கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

நாம் தமிழர், மநீம, அமமுக

வழக்கம்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே களமிறங்குகிறது நாம் தமிழர். கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் நாம் தமிழர் கட்சிக்குச் செல்வாக்கு இருப்பதால், இந்த முறை வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 6.8 சதவீத வாக்குகள் கிடைத்ததால், வெற்றி சாத்தியப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்புகிறார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் செல்வாக்கான சிறிய கட்சிகளின் வேட்பாளர்களைப் பெரிய கட்சிகள் விலைக்கு வாங்கும் நிலை இருப்பதால், அதை நாம் தமிழர் தம்பிகள் சிரமத்தோடு எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், நகர்ப்புறங்களைத் தனது கோட்டை என்று கூறிவருகிறது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால், அக்கட்சியின் பலம் கூடுதலாகவே சோதனைக்கு உட்படுத்தப்படும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 சதவீதம், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 3.43 சதவீத வாக்குகளை மட்டுமே மநீம பெற்றது. 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் அக்கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் மற்ற கட்சிகளை முந்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம், 8 மண்டலங்களில் செயலாளர்களை நியமித்து தேர்தல் பணிகளில் சுழன்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிலரையாவது அனுப்ப வேண்டும் என்பதில் அக்கட்சி தீவிரமாக உள்ளது. அது நடந்தாலே கமல்ஹாசனுக்குப் பெரிய வெற்றிதான்.

அதிமுகவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தலைத் தனியாக எதிர்கொள்வதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியைக்கூட சட்டப்பேரவைத் தேர்தலில் பெற முடியாமல் போனது டிடிவி தினகரனுக்கு. இந்த உள்ளாட்சித் தேர்தல் தினகரனுக்கு இன்னொரு அக்னிப் பரீட்சையாகவே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in