தமிழ்நாடு பொங்கலா, தமிழக பொங்கலா?: அதிரடி கேள்விக்கு `நச்' பதில் அளித்த தமிழிசை

தமிழ்நாடு பொங்கலா, தமிழக பொங்கலா?: அதிரடி கேள்விக்கு `நச்' பதில் அளித்த தமிழிசை

இன்றைய பொங்கல், தமிழ்நாடு பொங்கலா தமிழக பொங்கலா என்ற அதிரடி கேள்விக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செந்தரராஜன் `நச்' சென்று பதில் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செந்தரராஜன் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்கொள்ள வேண்டும். ஒருமையில் சொல்வது, அசிங்கமாக சொல்வது இவையெல்லாம் விட்டுவிட்டு இணையதளத்திலும் தமிழ் இனிமையாக வாழ வேண்டும். இந்த வார்த்தைகளால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னை செய்திருக்கணும் என்றால் எப்பவோ செய்திருக்க வேண்டும். இதைவிட மோசமான வார்த்தைகளை எல்லாம் எதிர்கொண்டு இருக்கிறேன்.

ஆளுநர்களை சொல்லும் போதும், அரசியல் கட்சித் தலைவர்களை சொல்லும் போதும், முதலமைச்சர்கள் போன்றவர்களை சொல்லும் போதும் வரம்பு மீறாமல் விமர்சனம் செய்து கொள்வதை பழகிக் கொள்ள வேண்டும். கருத்து மோதல்களாய் இல்லாமல் கருத்து பரிமாற்றமாக இருக்க வேண்டும். மேடையில்கூட வரம்பு மீறி பேசுகிறார்கள். பெண்களாக இருக்கட்டும், எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கட்டும், ஆளுநர்களை அதிகமாக வம்புக்கு இழுப்பது தற்போது அதிகமாகிவிட்டது. எது எப்படி இருந்தாலும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. நானும் நாகரிகமாக பதிவு செய்கிறேன். நீங்களும் நாகரிகமாக பதிவு செய்யுங்கள்" என்றார்.

இதன்பின்னர் செய்தியாளர் ஒருவர், இன்றைய பொங்கல் தமிழ்நாடு பொங்கலா தமிழக பொங்கலா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழிசை, "தமிழக தமிழ்நாடு பொங்கல். தமிழ்நாட்டின் தமிழக பொங்கல். தமிழ்நாட்டின் தமிழக தமிழ் பொங்கல். ஏனென்றால் தமிழ்நாடு என்ற வார்த்தை சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் என்ற வார்த்தை சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டை விட்டு தமிழகம் என்று சொல்ல முடியாது. தமிழகத்தை விடுத்து தமிழ்நாடு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழ்நாடு என்ற வார்த்தையை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்ற தமிழக அரசின் விவாதம் என்றுதான் சொல்வோம். ஒரு வார்த்தையை விட்டு இன்னொரு வார்த்தைக்கு முக்கியத்துவம் என்று சொல்ல முடியாது. தமிழ்நாடும் வேண்டும் தமிழகமும் வேண்டும். நாம் வார்த்தைகளை சொல்லும்போது என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சொல்வேன். என் தமிழ்நாடு, என் தமிழகம், என் தமிழ், அந்த உணர்வு இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in