இரண்டாம் இடத்தைக் கூட பாஜக நினைத்துப் பார்க்க முடியாது! - கே.எஸ்.அழகிரி பேட்டி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தேர்தலுக்காக மட்டும் திடீரென வந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். பிரதமரிடம் சொல்லிக்கொள்ள என்ன சாதனை உள்ளது? எனவே, வெற்றி என்பதை பற்றியல்ல, இரண்டாம் இடம் என்பதைப்பற்றிக்கூட பாஜக நினைத்துப் பார்க்கவே முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு அமையாது போனாலும் அதற்காக வருத்தம் கொள்ளாமல் தேர்தல் பணிகளில் தீவிரமாகவே இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அவரிடம் மக்களவைத் தேர்தல் நிலவரம் , தமிழக தேர்தல் சூழல், இந்தியா கூட்டணி, பாஜகவின் ஆட்சிக் கனவு குறித்து பேசினோம்.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது?

தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்று வருகிறேன். எல்லா இடங்களிலும் எங்களுக்கு மக்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது. எனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இந்த முறை தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றிபெறும். அரசியலுக்காகவோ, சொல்லவேண்டுமென்றோ இதை சொல்லவில்லை. எந்தப் குதிக்குச் சென்றாலும் மக்கள் எழுச்சியுடன் எங்கள் கூட்டணியை வரவேற்கிறார்கள்.

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

ஆர்எஸ்எஸ், பாஜகவின் வெறுப்பு அரசியல், சமூகத்தை பிளவுபடுத்துதல், பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான பல்வேறு தாக்குதல்கள் ஆகியவைதான் மக்கள் எங்கள் பக்கம் நிற்க காரணமாகும். தமிழகத்தில் அனைவரும் நாத்திகர்கள் கிடையாது. கடவுள் நம்பிக்கையாளர்கள் கூட இங்கே பாஜகவினரின் நடவடிக்கையால் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர். முக்கியமாக, ராகுல் காந்தி - ஸ்டாலின் இணை இங்கே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவாலின் கைது மற்ற மாநில முதல்வர்களை மிரட்டவே செய்யப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல், சமரசம் செய்துகொள்ளாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறார். பாஜகவுக்கும், எங்களுக்கும் உள்ளது சித்தாந்த மோதல் என்று கர்ஜிக்கிறார். இதனால் முதல்வர் ஸ்டாலினை மக்கள் தீர்க்கமாக நம்புகின்றனர்.

அதேபோல தமிழகத்துக்கு பாஜக அரசு எதையுமே செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அவர்களே அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டிக்கொடுக்கவில்லை. உ.பிக்கு 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் கொடுத்துள்ளனர், நமக்கு ஒன்றுகூட கொடுக்கவில்லை. ரயில்வே காரிடர் மும்பையிலிருந்து உ.பியின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைத்து டெல்லி செல்கிறது. ஆனால், தமிழகத்துக்கு ஒன்றுகூட கொடுக்கவில்லை. இவையெல்லாம் மக்களுக்குத் தெரிகிறது. அதனால் அவர்கள் திமுக கூட்டணியை உறுதியாக ஆதரிக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் தொகுதி ஒதுக்கீடு, சீட் கொடுத்தது உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் உட்பட பலரும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்களே..?

நாங்கள் யாருமே சீட் கேட்டு பிரச்சினை செய்யவில்லை. ஊடகங்களில் வெளிவந்ததைப் பார்த்துதான், எங்களில் பலபேருக்கு நாமும் சீட் கேட்டோமா என்றே தெரியவரும். தொகுதி ஒதுக்கீடு, சீட் கொடுத்தது என அனைத்துமே ஜனநாயக முறைப்படியே நடந்தது. அதில் எந்தவித ஒழுங்கின்மையும் கிடையாது. எல்லா தரப்பு தலைவர்களும் இணைந்து மேல்மட்ட தலைமையோடு ஆலோசித்தே முடிவெடுத்தோம். எல்லா சீட்களும் தரமானவர்களுக்கும், அரசியலில் உழைத்தவர்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக கட்சிகளில் தேர்தலில் போட்டியிட நிறையப் பேர் சீட் கேட்பார்கள், அதில் தவறில்லைதானே.

ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை
ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை

புதிய தலைவர் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

அனைவரையும் கலந்தாலோசித்து நன்றாகச் செயல்படுகிறார். அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்திக்கிறார். கடுமையாக உழைக்கிறார்

இந்த முறை பாஜக தனியாக கூட்டணி அமைத்து தீவிரமாக வேலை செய்கிறது; வெற்றிபெறுவார்களா?

பாஜக இங்கே வெற்றிபெறும் முகாந்திரம் இருப்பதாகவே தெரியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை வாங்கி வெறும் 4-ல் மட்டுமே பாஜக வென்றது. அதிமுக வெற்றிபெற்ற விகிதாச்சாரத்தில்கூட பாஜக வெல்லவில்லை. ஏனென்றால் அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள்கூட பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை. அதேபோல இந்த தேர்தலிலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்கவே மாட்டார்கள். எனவே வெற்றி என்பதை பற்றியல்ல, இரண்டாம் இடம் என்பதைப்பற்றிக்கூட பாஜக நினைத்துப்பார்க்க முடியாது.

அப்படியானால் இந்தமுறையும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி என்கிறீர்களா?

நிச்சயமாக இம்முறையும் திமுக – அதிமுக போட்டிதான். ஆனால், அதிமுககூட இந்த முறை திமுக கூட்டணிக்கு போட்டியாக இல்லை. இரண்டாம் இடத்தை பிடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு தேர்தலுக்கு முன்பே அதிமுக வந்துவிட்டது. திமுக கூட்டணி மிகவும் பலமாக இருப்பதை பார்த்து அதிமுக பின்வாங்கிவிட்டது.

முக்கியமாக, அதிமுகவுக்கும் - பாஜகவுக்கு எந்தளவுக்கு கருத்துவேறுபாடு இருக்கிறது என்று மக்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பாஜகவோடு கூட்டணி சேர்ந்தபோதும் சரி, விலகியபோதும் அவர்கள் அதற்கான தெளிவான காரணத்தை சொல்லவில்லை. எனவே மக்கள் அதிமுகவை நம்ப மறுக்கிறார்கள். இப்போதும் அதிமுக – பாஜக இடையே மறைமுக உறவு இருக்குமோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறாரே, அதற்கு எந்த பலனுமே கிடைக்காதா?

தேர்தலுக்காக பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் நிச்சயமாக பலன் கிடைக்காது. ஏனென்றால் தமிழக மக்கள் அவரை நம்பவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 108 டாலராக இருந்தது. அப்போது டீசல் ரூ.60-க்கும், பெட்ரோல் ரூ.70-க்கும், சிலிண்டர் ரூ.400-க்கும் கொடுத்தார். இதன் விலையை ஏற்றினால் எல்லா விலைவாசியும் உயரும் என அப்போது மன்மோகன் சிங் அழுத்தமாகச் சொன்னார்.

ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை அப்போதிருந்ததை விட பாதியாக குறைந்துவிட்டது. ஆனாலும், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதையெல்லாம் தமிழக மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளார்கள். திமுக அரசு இந்த 3 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ள மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எனவே மோடி எத்தனை முறை வந்தாலும் இங்கே பலன் கிடைக்காது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணி எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்பு எப்படி?

கடந்த தேர்தல்களைவிட இப்போது வலிமையாக உள்ளது. எல்லா மாநிலங்களிலும் சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம். எனவே இம்முறை பாஜகவை தோற்கடிப்போம்

சோனியா, ராகுல் காந்தி
சோனியா, ராகுல் காந்தி

ராமர் கோயில் இந்த தேர்தலில் தாக்கத்தை உருவாக்குமா?

ராமர் கோயில் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அயோத்தியில் 3,200 ராமர் கோயில்கள் உள்ளது. இப்போது கட்டப்பட்டுள்ளது 3,201- வது ராமர் கோயில் அவ்வளவுதான். அதுவுமில்லாமல் முழுமையாக முடிக்கப்படாத கோயிலை தேர்தலுக்காக பிரதமர் மோடியே போய் திறக்கிறார். கோயிலை அர்ச்சகர்கள் தான் திறக்கவேண்டும் என்பதே ஆகமம். ஆகமங்களை பின்பற்றவில்லை என்று சொல்லித்தான் இக்கோயில் திறப்பு விழாவில்கூட சங்கராச்சாரியார்கள் கலந்துகொள்ளவில்லை. எனவே, கோயில் கட்டியதாலேயே வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக நினைப்பது நடக்காது.

இந்தி பேசும் மாநிலங்கள் பாஜகவுக்கு கைகொடுக்கும் என சொல்கிறார்களே..?

நமது நாட்டின் உணவுக் கிடங்கில் கோதுமை கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் குறைந்துள்ளது. தேவையான அளவு கோதுமையை கொள்முதல் செய்யாமல் மத்திய அரசு விட்டுவிட்டது. இதனால் ரேஷனின் வழங்குவதற்கு கோதுமை இல்லை. இதனால் வெளிமார்க்கெட்ட்டில் கோதுமை விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதுவே தேர்தல் நேரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படி விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளில் எல்லாம் கோட்டைவிட்டுவிட்டு, ராமர் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் ஓட்டுப்போட்டுவிடுவார்களா?

மோடி வாகனப் பேரணி
மோடி வாகனப் பேரணி

தென்னிந்திய மாநிலங்களில் இந்தமுறை பாஜக மிகத்தீவிர முன்னெடுப்புகளை செய்கிறது. இதன் காரணம் என்ன?

ஒருவேளை, வடமாநிலங்களில் வெற்றி எண்ணிக்கை குறைகிறது என்பதால் அவர்கள் தெற்கு நோக்கி வந்திருக்கலாம். ஆனால், தேர்தலுக்காக மட்டும் திடீரென வந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். பிரதமரிடம் சொல்லிக்கொள்ள என்ன சாதனை உள்ளது? பணமதிப்பிழப்பால் கருப்புப் பணத்தை ஒழித்தாரா? 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார் கொடுத்தாரா? விவசாயிகளின் விளைபொருள்களின் விலையை இருமடங்காக்கினாரா?

ஆகவே, என்னதான் பிரச்சாரம் செய்தாலும், தமிழகம், கேரளாவில் அவர்களால் வெற்றிபெறவே முடியாது. தெலங்கானாவிலும் வெற்றிபெறவே முடியாது. ஆந்திராவில் ஓரிரு இடங்களை வெல்லலாம். கர்நாடகாவில் 25% இடங்களில் வெற்றிபெறலாம். எனவே, தென்னகம் அவர்களுக்கு கைகொடுக்காது. வடகிழக்கு மாநிலங்களும் பாஜகவை கைவிட்டுவிட்டது.

பிரதமர் மோடி தொடர்ச்சியாக இந்தியா கூட்டணி மீது ஊழல், குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாரே?

10 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்மோகன் சிங் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு உண்டா? அப்படி அப்பழுக்கற்ற அரசாங்கத்தை நடத்தியவர் அவர். 2ஜி என்பதுகூட கபில் சிபல் சொன்னது போல ‘ஜீரோ லாஸ்’. இரண்டரை ஆண்டுகள் வழக்கு நடந்து 2ஜி-யில் எந்த முறைகேடும் இல்லையென சிபிஐ நீதிமன்றமே சொல்லிவிட்டது. 2 ஜி என்பது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக புனையப்பட்ட கட்டுக்கதை. 2ஜி-யை வெளிப்படுத்திய அதே சிஏஜி அறிக்கை இப்போது மோடியின் ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறது. இதைப்பற்றி ஏன் யாரும் பேசவில்லை?

தேர்தல் பத்திர விவகாரம், ரஃபேல், அதானி விவகாரம் என மோடி அரசின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அவர்கள் ஆட்சியை விட்டு இறங்கிய பின்னர் இதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். அப்படியெல்லாம் பாஜகவினர் ஒன்றும் புனிதமானவர்கள் இல்லை. குடும்ப ஆட்சி என்பதெல்லாம் தவறான வாதம். மக்கள் வாக்களித்துத்தான் உதயநிதியும், ராகுல் காந்தியும் வெற்றி பெறுகிறார்கள். பாஜக தலைவர்கள் பலரின் வாரிசுகளும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in