அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப்பூங்கா, திமுக ஆட்சியில் அமளிப் பூங்கா: ஜெயக்குமார் வர்ணனை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிஅதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப்பூங்கா, திமுக ஆட்சியில் அமளிப் பூங்கா: ஜெயக்குமார் வர்ணனை

சட்ட ஒழுங்கில் இந்தியாவிலே மிக மோசமான மாநிலம் தமிழ்நாடு தான். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது. திமுக ஆட்சியில் அது அமளிப் பூங்காவாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக வரும் 22-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளிக்க உள்ளனர்.

இதற்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " திமுக அரசு பொறுப்பேற்ற பின் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி வருகிறது. அவரது தாத்தா காலத்தில் கூட சம்பாதிக்காததை இரண்டாண்டு ஆட்சி காலத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாயை அமைச்சர் உதயநிதி சம்பாதித்து உள்ளார். அவருடன் இருந்தவரே போட்டு கொடுத்தால், இப்போது அந்த பணத்தை பதுக்க இடம் தேடி வருகிறார்.

அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாக தான் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் ஓபிஎஸ் சற்று யோசித்து பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் ஓன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதின் விளைவாக மத்திய அரசு அனுமதி வழங்கியது.

குறிப்பாக போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழலில், அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தின் போது கொடியேற்றி வரலாற்றில் பெயர் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினரை ஏவி விட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலவரத்தை உண்டாக்கினார்.

இதில் நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் மீனவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகினர் ,இதனை யாரும் மறந்து இருக்க முடியாது. தடியடி நடத்தியவர் தான் ஜல்லிக்கட்டு நாயகனா? உண்மையை மறைக்க தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸ் சொல்லிக் கொள்கிறார், காவல்துறையினர் தடியடிக்கு அனுமதி வழங்கிய ஓபிஎஸ்சுக்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் , கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை அதிகரித்து விட்டது. காரில் வந்து நகை பறிக்கின்றனர், அந்த அளவுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. சட்ட ஒழுங்கில் இந்தியாவிலே மிக மோசமான மாநிலம் தமிழ்நாடு தான். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. திமுக ஆட்சியில் அமளி பூங்காவாக உள்ளது. ஆரம்பத்திலேயே சாராயம் விற்றவர்களை திமுக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று இத்தனை பேர் இறந்து இருக்க மாட்டார்கள் என்றார்.,

அதிமுக ஆட்சியில் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தாக என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது தொடர்பான கேள்விக்கு,” உண்மையில் செந்தில் பாலாஜி நிதானத்தில் தான் பேசுகிறாரா என்பதை மது போதையை பரிசோதிக்கும் ப்ரீத் அனாலைசர் வைத்து தான் பரிசோதிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in