தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த மூன்று புகாரின் அடிப்படையில் நான்கு வழக்குகள் சென்னை எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியும், காவல்துறை முறையாக விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதன்படி நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்ய கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும் தங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்க கோரி அமலாக்கதுறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இதோபோல் புகார் அளித்தவர்களும் வழக்கை ரத்து செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். அனைத்து வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவற்றை விடுவிக்க கூடாது என வாதிட்டார். புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சிவஞானம்," வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தார். அதே போல் வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கதுறை மனுவையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும்" என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in