பரபரப்பான சூழலில் கூடுகிறது சட்டமன்றம்... காவிரி விவகாரத்தில் தனித் தீர்மானம்!

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.  இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். 

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடந்து தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. 

சட்டப்பேரவையை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்ட வேண்டும் என்ற விதிப்படி  இம்மாதம் 20-ம் தேதிக்குள் சட்டசபையை கூட்டப்பட வேண்டும். அதன்படி அக்டோபர் மாதம் 9-ம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு  அவை கூடும் என்று  சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அதன்படி தமிழக சட்டப்பேரவை, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து வினா-விடைகள் நேரம் எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். 

கேள்வி நேரம் முடிந்ததும் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய   கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு   தாக்கல் செய்வார். பின்னர், அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார். 

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு   அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி ஒன்றிய அரசை வலியுறுத்த, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோர உள்ளார். 

அந்த தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்படும். தொடர்ந்து நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். அனேகமாக சட்டப்பேரவை 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

காவிரி
காவிரி

மேலும் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in