
``ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி அளிக்காத ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை, அவர் கேள்வி கேட்டால் பதில் சொல்லும் உரிமை தான் இருக்கிறது'' என்று அமைச்சராக ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "இணையவழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்டம் இயற்றிக் கொடுத்து நேற்றோடு அதனுடைய கால அவகாசம் முடிந்து விட்டது. அவசர கால சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தந்தார். அதில் இருக்கக்கூடிய அதே சரத்துக்கள் தான் தற்போது சட்ட முன் வடிவிலும் கொடுக்கப் பட்டுள்ளது.
அதன்பேரில் அவர் சில சந்தேகங்கள் கேட்டார். சந்தேகங்கள் கேட்கப்பட்டதும் 24 மணி நேரத்தில் அந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்தோம். அதனால் நேற்று மாலைக்குள் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் 95% மக்கள் இணையவழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் . உலக சுகாதார நிறுவனம் இதை ஒரு வகை நோய் என்று அறிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாயப் பணி. அதைத்தான் தமிழக அரசு செய்திருக்கிறது.
இதை கால தாமதப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஏன் காலதாமதப்படுத்தினார் என்று தெரியவில்லை. அது பற்றி அவருக்கு தான் தெரியும். இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை. அவர் கேள்வி கேட்டால் பதில் சொல்லும் உரிமை தான் இருக்கிறது.
எனவே தற்போது அமலில் உள்ள சட்டங்கள் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டத்துக்கு அனுமதி கிடைத்தால் அதன்படி நடக்கலாம். இல்லையென்றால் அமலில் இருக்கும் மற்ற சட்டங்களின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆளுநர் கையெழுத்து போட்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி விடலாம். அதற்கு வழி வகை இருக்கிறது" என்று தெரிவித்தார்.