மருத்துவச்சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடம் : ஓபிஎஸ்

மருத்துவச்சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடம் : ஓபிஎஸ்

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவக் கல்லூரி இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு, பொது சுகாதாரச் சவால்களைச் சந்திப்பதிலும், மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் அதிமுக தான்.

தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கிட்டத்தட்ட 5,125 மருத்துவ இருக்கைகளில், 15 சதவீத இடங்கள், அதாவது 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகின்றன. இதேபோன்று ஒவ்வொரு மாநில அரசும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை ஒதுக்குகின்றன. இந்த இடங்களை மாணவ, மாணவியருக்கு ஒதுக்கும் பணியினை மத்திய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கலந்தாய்வுக் குழு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழு 2021-2022-ம் ஆண்டு கல்வியாண்டிற்கான நான்கு கலந்தாய்வுகளை முடித்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 15 மருத்துவ இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கான 2 இடங்கள், சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கான 5 இடங்கள், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் என 24 இடங்கள் இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்படாமல் காலியாக உள்ளதாகவும், இது தவிர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன" என்று கூறியுள்ளார்.

மேலும்" பொதுவாக, இரண்டாவது கலந்தாய்வு முடிந்தவுடன், மத்தியக் கலந்தாய்வுக் குழுவினால் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இருப்பினும் இந்த ஆண்டு, மருத்துவச் சேர்க்கைக்கான இறுதி நாள் முடிந்த பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நிரப்பப்படாத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு இன்னமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகள் உட்பட கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மாணவ, மாணவியர் மருத்துவம் பயிலும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 24 மருத்துவ இருக்கைகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டின்படி ஒதுக்கவிருக்கும் 4 மருத்துவ இருக்கைகள் தகுதியுடைய ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

"அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டு, நான்கு கலந்தாய்வுகளுக்குப் பின்பும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அந்த இருக்கைகளை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட தகுதியுடையோர் மத்தியில் நிலவுகிறது. எனவே, தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தோருக்குத் தகுதியின் அடிப்படையில் வழங்கவும், மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்" என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.