`ஆளுநர் எதைப் பேசவேண்டும் என்பதற்கு தமிழ்நாடுதான் எடுத்துக்காட்டு'- முதல்வரை பாராட்டும் சபாநாயகர் அப்பாவு

`ஆளுநர் எதைப் பேசவேண்டும் என்பதற்கு தமிழ்நாடுதான் எடுத்துக்காட்டு'- முதல்வரை பாராட்டும் சபாநாயகர் அப்பாவு

"இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆளுநருடைய உரிமை எது? எது செய்ய வேண்டும்? எது செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சட்டமன்றம் நடந்துள்ளது" என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

ஆளுநர் உரையில் இல்லாதவற்றை ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் அவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவு இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "ஆளுநர் உரையில் உள்ளவற்றை இந்த அவை ஏற்றுக் கொண்ட பின்பு தான் அவைக்குறிப்பில் இடம்பெற்று இருக்கிறது. பல பேர் கேட்கலாம், என்ன அவசரம் என்று? மிக மதிநுட்பத்தோடு நம்முடைய முதல்வர் அந்த இடத்தில், அந்த நிமிடத்தில் அந்த முடிவு எடுக்கவில்லை என்றால் அனைத்து ஊடகங்களும், அனைத்து பத்திரிகைகளும் உலகம் முழுமைக்கும் அவற்றை பரப்பி விடுவார்கள்.

ஆகவே தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது இந்த அரசு அல்ல. ஆளுநர் பேசும்போது ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. மதி நுட்பத்தோடு மிகத் துல்லியமாக முதல்வர் கொண்டு வந்த காரணத்தினால் தான் நம்முடைய மாண்பு காப்பாற்றப்பட்டுவிட்டது என்று மட்டும் நான் சொல்லமாட்டேன், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆளுநருடைய உரிமை எது? எது செய்ய வேண்டும்? எது செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சட்டமன்றம் நடந்துள்ளது. ஆளுநர் உரையின்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் இருக்கை எதிரே நின்று கோஷம் எழுப்பியதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆளுநர் உரையிலே நமது முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தான் இந்திய அளவில் பேசப்படுகின்ற முக்கியமான பொருளாக இருக்கிறது. நாம் யாரும் மறந்துவிட முடியாது. மறைந்த தலைவர் கலைஞர், கோட்டையில் கொடியேற்றுவது ஆளுநர் என்ற நிலையை மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் கொடியேற்ற வேண்டும் என்று சொல்லி இந்தியாவுக்கே பெருமை சேர்த்து இன்றுவரை சுதந்திர தினத்திற்கு கொடி ஏற்றுகிறமோ அதே நிலையைத் தான் நம்முடைய முதல்வர் இந்தியா முழுவதும் இருக்கின்ற அனைத்து சட்டமன்றங்களிலும் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் மாண்பு மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களின் மாண்பையும் மிக சிறப்பாக காப்பாற்றிய முதல்வருக்கு இந்த பேரவை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. இப்போது வெளிநடப்பு செய்தவர்கள் தயவு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்மை நிலையை நீங்கள் புரிந்து தெரிந்து மக்களுக்காக பணியாற்றுவதற்கு அவையிலே அமர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசும்போது ஆளுநர் பற்றியோ மற்ற யாரைப் பற்றியோ பேசும்போது விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in