`பாஜக செய்வது மாயை பிரசாரம்; மத அரசியல் செய்வது பிற்போக்குத் தனம்'- திடீரென பொங்கும் ஜெயக்குமார்

`பாஜக செய்வது மாயை பிரசாரம்; மத அரசியல் செய்வது பிற்போக்குத் தனம்'- திடீரென பொங்கும் ஜெயக்குமார்

“தினமும் ரிமோட்டை கையில் பிடிக்க வேண்டும், கத்தரிக்கோலோடு திரிய வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். அப்படி இருந்தால் எப்படி காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்?” என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்காக சட்டம் கொண்டு வந்தோம். அந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டித்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்தார்கள். திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி, போலி லாட்டரி, கஞ்சா, போதைப் பொருட்கள் சாதாரணமாகப் புழுங்கும் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.

சமூக விரோதிகளிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, இந்த குற்றங்களுக்கு திமுக அரசு மறைமுகமாகத் துணை நிற்கிறது. ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய நிலைப்பாட்டிற்காகப் போராட்டம் நடத்துவார்கள். தங்கள் கட்சியை வளர்க்க பாஜக மாயை பிரசாரம் செய்கிறது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத் தனம். அதிமுக ஒரு போதும் எதிர்கட்சி கடமையிலிருந்து விலகாது. விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றில் நாங்கள் போராட்டம் நடத்தி இருக்கிறோம். பொங்கல் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் பட்டவர்த்தனமாகச் சொன்னோம். அதிமுகவில் உள்ள தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்துகிறது. ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அதிமுக எப்போதும் பின்வாங்கியது கிடையாது. திமுக எதிர்கட்சியாக இருந்த போது நடைபெற்ற போராட்டங்களில் அவர்கள் அவ்வப்போது பின்வாங்குவார்கள்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு லாக்கப் மரணம் தொடர்கதையாக மாறிவிட்டது. நிர்வாகத் திறமை உள்ள முதல்வராக இருந்தால் காவல்துறையை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தினமும் டிவியில் வரவேண்டும், தினமும் ரிமோட்டை கையில் பிடிக்க வேண்டும், கத்தரிக்கோலோடு திரிய வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். அப்படி இருந்தால் எப்படி காவல்துறையை அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்? பொய் வழக்குப் போடுவதும், எதிர்கட்சிகளைப் பழிவாங்குவதும் ஸ்டாலினுடைய நிலைப்பாடாக இருக்கிறது. எங்களுக்கு எதிராக ஸ்டாலின் எந்த அடக்கு முறையை கையாண்டாலும் எங்களை அடக்க முடியாது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in