`பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு திமுக அரசும் துணை போகிறது'- என்எல்சி விவகாரத்தில் கொந்தளிக்கும் சீமான்

சீமான்
சீமான்

`தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களை தாரைவார்ப்பதை தமிழ அரசு கைவிட வேண்டும்' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `நெய்வேலி நிலக்கரி நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு நெய்வேலியைச் சுற்றியுள்ள 60 கிராம ஏழை, எளியோரின் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயலும் தமிழ் அரசின் செயல் கண்டனத்திற்குரியது. நெய்வேலி நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு நிலங்களை அபகரித்து அளிக்க தமிழ அரசு அவசரம் காட்டுவது சர்வாதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஜம்புலிங்கனாரின் பெருங்கொடை, காமராஜரின் சீரிய முயற்சி, தமிழர்களின் கடும் உழைப்பால் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தொடங்க தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியை பூர்வகுடி தமிழர்களின் நிலை இன்று வரை பரிதாபமாக உள்ளது. இந்நிறுவனத்தில் தமிழர்கள் இன்று வரை ஒப்பந்த கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இங்கு வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

இந்நிறுவன தலைவர்கள், உயரதிகாரிகள் வடவர்களே உள்ளனர். இந்நிறுவனத்தை 2025-ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

தாரைவார்க்க போகும் நிறுவனத்திற்காக தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு பறித்து ஒப்படைக்க தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. ஏற்கெனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்கு பணி வழங்காமலும் இனப்பாகுபாடு கடைபிடிக்கிறது.

நெய்வேலி நிறுவனத்திடம் தமிழர்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சி எடுக்காத தமிழக அரசு, நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்பு காட்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தமிழர்களுக்கு உறுதியளித்தபடி வேலை, உரிய இழப்பீடு வழங்காதபோது, தமிழர் நிலங்களை பறித்து நிலக்கரி நிறுவனத்திடம் வழங்க அம்மாவட்ட அமைச்சர்கள் துடிப்பது ஏன்?

இதன்மூலம் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்க உள்ளதோ? நிலக்கரி எடுக்க தமிழர்களிடம் ஏற்கெனவே பறித்த நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கர் இன்னும் பயன்படுத்தபடாமல் உள்ளது.

இந்நிலையில், மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்கு பறிக்க வேண்டும்?. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாரிடம் ஒப்படைத்தால், நிலங்கள் தர மக்கள் முன்வரமாட்டர். இதனால் அதற்கு முன்பே நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்ற பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு திமுக அரசும் துணை போகிறது. இது தான் பாஜகவின் தமிழர் விரோதப்போக்கை எதிர்க்கும் திமுகவின் திராவிட மாடல் அரசா?

பொதுத்துறை நிறுவனமாக இருந்தபோதே உரிய இழப்பீடு, நிரந்தரப் பணி வழங்காமல் நிலம் வழங்கிய தமிழர்களை நீதிமன்றத்திற்கு அலையவிட்ட நிலையில், தனியார் மயமாகப்போகும் நிறுவனத்தை நம்பி எப்படி தமிழர்கள் தங்கள் நிலங்களை ஒப்படைக்க முடியும்?

இது தமிழர்களை தங்களது சொந்த மண்ணில், நிலமற்ற கூலிகளாக, அகதிகளாக மாற்ற பாஜக, திமுக இணைந்து நடத்தும் கூட்டுச்சதி ஆகும். இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு இனியும் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். தனியார் மயமாகவுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களை தாரைவார்ப்பதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in