
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக சற்று தணிந்திருந்த இந்த மோதல், கடந்த 12்-ம் தேதி நீட் தேர்வு குறித்து ஆளுநர் மாளிகையில் பேசிய விவகாரம் விஸ்ரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அன்றைய தினம், ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும் என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஆளுநர், ‛’நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்’’ என்றார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் குரோம்பேட்டையைச் சேர்ந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி ஆக. 20்-ம் தேதி திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் மூன்று நாட்கள் தங்கி இருக்கும் ஆளுநர் ரவி யார், யாரைச் சந்தித்து பேச உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.