தமிழக ஆளுநர் விவகாரம்: குடியரசு தலைவரை நாளை சந்திக்கிறது திமுக குழு

டி.ஆர்.பாலு எம்.பி
டி.ஆர்.பாலு எம்.பி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை டி.ஆர்.பாலு எம்.பி தலைமையிலான திமுக பிரதிநிதிகள் குழு நாளை சந்திக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023-ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜன.9-ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், திராவிட மாடல் என்ற வார்த்தை உள்பட தலைவர்களின் பெயரையும் வாசிக்காமல் தவிர்த்தார். இதை கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசியதும், நிகழ்வில் பாதியிலேயே , தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் சில கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே கிடப்பில் போட்டுள்ளதுடன், முழு நேர ஆர்எஸ்எஸ் ஊழியரைப் போல செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்க முடியாது என்றும், தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை ஓயும் முன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவரது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான பிரதிநிதிகள் குழு நாளை சந்திக்க உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை மரபை மீறி நடந்து கொண்டது உள்ளிட்ட விவரங்களை திமுக குழு குடியரசு தலைவரிடம் எடுத்துரைப்பதுடன், புகார் மனுவை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in