
தமிழக ஆளுநர் தனக்குரிய ஆளுநர் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவர் அதற்கு மாறாக நாலாந்தர அரசியல்வாதி போல் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூரில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஒன்றிய பாஜக அரசு தனது அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அமலாக்கத் துறையை வைத்து எதிர் கட்சிகளைப் பழிவாங்குவது, கட்சிகளை உடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. எதிர் கட்சிகளை பலவீனப்படுத்தி தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்து அதற்கான முயற்சியும் செய்து வருகிறது. இது சாத்தியமே கிடையாது. மக்களிடையே மோதலை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் பழக்கமாக இருக்கிறது. மக்களை மோத விட்டு அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு உள்ள தந்திர முயற்சி தான் இது.
தேர்தலின் போது பா.ஜக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? விலைவாசி வியர்வை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறீர்கள்? 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியது, கருப்பு பணத்தை மீட்பது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலை தருவது என்ன ஆயிற்று போன்ற கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள்.
ஆனால் பாஜக தலைவர்கள் இதற்கு பதில் சொல்லாமல் பொய் பிரச்சாரம் மூலம் தங்களை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்கின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஒன்றிய பாஜக அரசை மக்கள் தோற்கடிப்பார்கள். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய அணி உருவாகியுள்ளது. அதுதான் வெற்றி பெறும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்குரிய ஆளுநர் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதற்கு மாறாக நாலாந்தர அரசியல்வாதி போல் செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே, தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அவர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஆளுநராக இருப்பது பொருத்தமும் அல்ல சரியும் அல்ல.
ரவீந்திரநாத் எம்.பியின் வெற்றி செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அவர் மேல் முறையீடு செய்வதற்கு முப்பது நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. ராகுல் காந்தியின் வழக்கில் மேல்முறையீடு செய்து கொள்ள நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஆனால், ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. அடுத்த நாளே அவரது பதவியை பறித்தார்கள். இதில் என்ன செய்ய போகிறார்கள் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார்.