
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கொட்டும் மழையில், தமிழக அரசின் ’நடப்போம் - நலம் பெறுவோம்’ திட்டத்தை தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டனர்.
சென்னையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், வியாபார ஸ்தலங்களும் பொது இடங்களை மெல்ல மெல்ல சுருக்கி வருகிறது. இதன் காரணமாக, விளையாட்டு மைதானங்கள் புதியதாக உருவாவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.
இது இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனை சரி செய்ய சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோ மீட்டர் நீள நடைபாதையை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோ மீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டது. நடப்போம் - நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையை அமைச்சர் உதயநிதி இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி, ‘’ நடப்போம் - நலம் பெறுவோம் என்ற இந்த திட்டம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி உடல் நலத்தை பேணி காக்க வேண்டும்’’ என்றார்.
முன்னதாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’உடற்பயிற்சி என்பது என்றைக்குமே நம்மை பாதுகாக்கும். இளம் வயதினருக்கு மாரடைப்பு போன்றவை வருவதற்கு காரணம் அவர்களிடம் போதிய உடற்பயிற்சி இல்லாததுதான். தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.