
'’வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு தொழிலாளர்களின் அச்சத்தை போக்கியுள்ளது’’ என பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோவை அடுத்து பீகார் மாநில குழு திருப்பூர், கோயம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்துக் கேட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் தங்கியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்து கருத்துக் கேட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில அதிகாரி பாலமுருகன், ‘’ தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களிடம் பேசி வருகிறோம். தொழிலாளர்கள் தாக்கும் வீடியோ பரவிய நிலையில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வீடியோவால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் இருந்தது உண்மைத்தான். தற்போது அவர்களிடம் இருந்த பயம் குறைந்துள்ளது’’ என்றார்.