‘நல்ல திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்துகிறது திமுக அரசு’ - ஓபிஎஸ் கண்டனம்

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இம்முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதாரத்தில் ஒரு நாடு உலக அரங்கில் தனிச்சிறப்புடன் விளங்க தொழிற் கல்வி முக்கியம் என பாரதியார் வலியுறுத்தினார். இப்படிப்பட்ட தொழிற்கல்விக்கு திமுக அரசு மூடுவிழா நடத்த முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டம், அம்மா மினி கிளினிக், ஜெயலலிதான பெயரிலான பல்கலைக்கழகத்தை ரத்து செய்வது என்ற வரிசையில், தற்போது அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய திமுக அரசு உத்தரவிட்டிருப்பதை பார்க்கும்போது, நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துகிற அரசாக திமுக அரசு விளங்குகிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்விப் பிரிவுகளை அடியோடு மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு முதற்கட்டமாக தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுமாறும், அதில் சேர்ந்த மாணவர்களை வேறு பாடப்பிரிவுக்கு மாற்றுமாறும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இதனடிப்படையில் தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுக்கு தெரியாமலேயே பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதுதான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதற்கு காரணம் என சொல்லப்படும் நிலையில், பணியிடங்களை நிரப்பாமல் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய பழமொழிக்கு ஏற்றார் போல் பாடப்பிரிவுகளையே மூடுவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது. இதனால் பொருளாதாரம் பாதிப்படையும், வேலை வாய்ப்பு இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லாத சூழல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதை அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தொழிற்கல்வி தொடந்து சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in