செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை: நீக்கக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல்

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை: நீக்கக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யபட்டுள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென மனுத்தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான எத்தனை வழக்குகளில் அமலாக்கத்துறையும் தங்களை இணைத்துள்ளது என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி மனு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in