வெள்ள நிவாரணத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு... பாஜகவுக்கு செக்வைக்கும் திமுக!

ஸ்டாலின் மோடி
ஸ்டாலின் மோடி

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடியை இடைக்கால நிவாரணநிதியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. பாஜகவுக்கு எதிரான திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக இருக்கும் குமணன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் வடதமிழகத்தை சேர்ந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல், அதே மாதத்தில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவும், நிவாரணம் வழங்கவும் ரூ. 37, 907 கோடி வழங்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும், இது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசால் மத்திய நிதியமைச்சகத்திடமும் அளிக்கப்பட்டது. மத்திய குழுக்களும் புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தியது. ஆனாலும் இதுவரை மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வேலூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், மழை வெள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக ரூ.2,000 கோடி இடைக்கால நிவாரணநிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மக்களவைத் தேர்தல் பரப்புரையில் திமுக அரசை குற்றம்சாட்டி கச்சத்தீவு விவகாரம், போதைப்பொருள் விவகாரம் போன்றவற்றை பாஜக கையிலெடுத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரை எய்ம்ஸ், 29 பைசா மோடி போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்த திமுக, இப்போது அதிரடியாக வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. வெள்ள நிவாரணத்துக்காக மாநில அரசு ஒன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அரசியல் களத்திலும், தேசிய அளவிலும் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in