`ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகிவிட்டது'- கே.எஸ்.அழகிரி

கே எஸ் அழகிரி
கே எஸ் அழகிரி

`தமிழக ஆளுநர் பதவி விலகுகிற வகையில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இணைந்து மிகத் தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகி இருக்கிறது' என்று தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக அவர் இன்று அறிக்கையில், 'தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதல் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.  இது குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டன குரல் எழுப்பியும் அதை அலட்சியப்படுத்துகிற வகையில் கருத்துக்களை கூறி வருகிறார். 

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடுகிற சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிப்பது நடைமுறையில் உள்ளது.  ஆளுநர் உரை என்பது தமிழக அரசு தயாரித்து அளிக்கிற கொள்கை அறிவிப்பாகும். இந்த உரையை முழுமையாக வாசிப்பது ஆளுநரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இதை மீறுகிற வகையில் ஆளுநர் தனது உரையில் இடம் பெற்றிருந்த  சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டு இடம்பெறாத சில வார்த்தைகளை கூறியது அப்பட்டமான அரசியல் சட்ட விதி மீறலோடு,  சம்பிரதாயங்களையும் புறக்கணிப்பதுமாகும்.

இத்தகைய விதி மீறல்கள் தமிழக அரசுக்கு விடப்பட்டிருக்கிற சவால் என்பதைவிட  அரசியலமைப்பு சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தலாகும். தமிழக ஆளுநர் இத்தகைய அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

ஆளுநர் உரையில், வளர்ச்சி குறித்து  தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்ற வார்த்தையையும்,  சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால்  தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையையும் ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தது அவரது அராஜக ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது. 

ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அறிவிப்பு என்கிற அடிப்படையைக்கூட புரிந்து கொள்ளாமல்  உதாசீனப்படுத்துகிற ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர். இவர் செய்ததைப்போல மத்திய அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பு வாசகங்களில்  குடியரசுத் தலைவர் சில வாசகங்களை தவிர்த்து வாசித்தால் அதை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வாரா?  பாஜக ஏற்றுக் கொள்ளுமா? 

எனவே,  அரசியல் சட்ட வரம்புகளை மீறிய ஆர்.என்.ரவி,  ஆளுநர் பொறுப்பில் இருந்து பதவி  விலகுகிற வகையில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இணைந்து தீவிரமான போராட்டத்தை நடத்துவது மிக மிக அவசியமானதாகிவிட்டதையே ஆளுநரின் இத்தகைய அத்துமீறல் போக்கு வெளிப்படுத்துகிறது' என்று தெரிவித்திருக்கிறார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in