
'’பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துச் சென்று 2024 ஆட்சி மாற்றத்தையும் மக்கள் ஆட்சியையும் காங்கிரஸ் கட்சிக் கொண்டு வரும் ‘’ என காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் முதலீடுகளைக் கொண்ட எல்ஐசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்களின் மூலம் அதிக அளவில் கடன் உதவி வழங்கி அதானியின் வர்த்தக மோசடிக்கு துணை போன மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை எஸ்பிஐ வங்கி கிளையின் முன்பு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், ‘’ மக்களுக்கு எதிரான மக்கள் விரோத ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் எங்களுடைய நோக்கம்.
விவசாயிகள் பிரச்சினை, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடு சந்தித்து வருகிறது. மக்கள் எவ்வளவு முறை கோரிக்கை வைத்தாலும் அதற்கு பாஜக அரசு செவி சாய்க்காமல் தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறது.
தனியாரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதை தவிர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மக்களுக்கு மானிய விலையில் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே காங்கிரஸ் அரசு பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தற்போது தனியார் நிறுவனங்களாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதையெல்லாம் கண்டித்து இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துச் சென்று 2024 ஆட்சி மாற்றத்தையும் மக்கள் ஆட்சியையும் கொண்டு வருவோம்’’ என தெரிவித்தார்.