ஆளுநர் அதிகாரத்தில் கை வைத்த முதல்வர்!

வெளிச்சத்துக்கு வந்த அரசியல் கட்சிகளின் முரண்பட்ட நிலைப்பாடுகள்
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையேயான மோதல் முற்றியுள்ள சூழலில், ஆளுநரின் அதிகாரத்திலேயே கை வைத்திருக்கிறது திமுக அரசு. ஆம், துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து பறித்து மாநில அரசுக்கு மாற்ற வகை செய்யும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு. இதன் மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடியின் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், இந்த முடிவை வரவேற்க வேண்டியவர்கள் எதிர்ப்பதும், முன்பு, எதிர்த்தவர்களின் நிலைப்பாடு மாறியிருப்பதையும் காண முடிகிறது. இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு அரசியல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதிகரித்த அதிருப்தி

நீட் தேர்வு மசோதா உட்பட 11 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் மீது திமுக அரசு அதிருப்தியில் உள்ளது. அதன் நீட்சியாக, தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்த தேநீர் விருந்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்தது. அடுத்து, எதிர்பார்த்தது போலவே துணைவேந்தர்களை, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் நியமனம் செய்வதற்குப் பதிலாக தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. ஜனவரியில் நடைபெற்ற கூட்டத் தொடரின் போதே இதற்கான அறிவிப்பை ‘டீஸர்’ போல முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இப்போது ‘மெயின் பிக்சர்’ வெளிவந்திருக்கிறது.

பேரவையில் உயர்க் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை ஏப்ரல் 11-ல் நடைபெற்றது. அன்றே துணைவேந்தர் நியமன சட்டத் திருத்தமும் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான அறிவிப்பு எதுவும் சட்டப்பேரவையில் வெளியாகவில்லை. ஒருவேளை, திமுக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால், அந்தத் திருத்தச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவை ஏப்ரல் 25-ம் தேதிக்கு மூன்று தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகக் கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதற்கு வித்திட்டது, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி ஏப்ரல் 25 மற்றும் 26-ல் கூட்டியிருந்ததுதான்.

துணைவேந்தர்கள் மாநாட்டில்...
துணைவேந்தர்கள் மாநாட்டில்...

அமைச்சரை அழைக்காத ஆளுநர்

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க டெல்லியிலிருந்து பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் (யுஜிசி) ஜெகதீஸ் குமார், ஜோஹோ நிறுவனர் வேம்பு ஆகியோரை அழைத்திருந்த ஆளுநர் மாளிகை, தமிழக உயர்க் கல்வி அமைச்சரும், பலகலைக்கழகங்களின் இணை வேந்தருமான பொன்முடிக்கு அழைப்பு விடுக்கவில்லை. குறைந்தபட்சம் தமிழக உயர்க் கல்வி துறைச் செயலாளருக்கும் அழைப்பிதழ் இல்லை என்று திமுக தரப்பில் சொல்கிறார்கள். இதையொட்டி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், ஆளுநருக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த மாநாட்டுக்கு முன்பாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்பதாக அமைச்சர்கள் பொன்முடியும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் உறுதியளித்துவிட்டு பங்கேற்கவில்லை. அதனால், ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்த அதே நாளில், தமிழக சட்டப்பேரவையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து தமிழக அரசுக்கு மாற்றும் சட்டத்திருத்தத்தை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தார் முதல்வர் ஸ்டாலின். “ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை இருப்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு கடந்த 4 ஆண்டுகளாகத் தலைதூக்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இந்தச் செயல் மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக இருக்கிறது” என்று சட்டப்பேரவையில் முதல்வரின் பேச்சில் அனல் தெறித்தது.

எதிர்க்கும் அதிமுக, பாஜக

ஆளுநருக்கு எதிராக திமுக அரசு காய்களை நகர்த்தியிருந்தாலும், நீட் தேர்வு தொடர்பான மசோதாவை நீண்ட நாட்களாகக் கிடப்பில் போட்டு வைத்து நிராகரித்த ஆளுநர் ரவி, இரண்டாவது முறையாக அனுப்பிய மசோதாவையும் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய அதிகாரத்திலேயே கை வைக்கும் மசோதாவுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துவிடுவாரா என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்துள்ளது.

இது தொடர்பாக கோட்டையில் சூடான பட்டிமன்றங்களும் நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கும் அதிகாரங்களை ஆந்திரா, தெலங்கானா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் தங்கள் கையில் வைத்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதை முதல்வர் ஸ்டாலினும் சட்டப்பேரவையிலேயே குறிப்பிட்டிருந்தார்.

இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாகக் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள் உள்ளன. ஆளுநரிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும் இந்தத் திருத்தச் சட்டத்தை இப்போது கொண்டுவரும் திமுக அரசு, 1994-ல் இதேபோன்ற திருத்தத்தை ஜெயலலிதா கொண்டுவந்தபோது எதிர்ப்பு தெரிவித்தது என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.

இதேபோல் 2011-ல், குஜராத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியும் இதேபோன்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து ஆளுநரிடமிருந்து அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றினார். ஆனால், இன்று நரேந்திர மோடி வழியில் ஸ்டாலினும் அதே சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ள சூழலில் தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. 28 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் தலைவி ஜெயலலிதா கொண்டுவந்த அதே சட்டத்திருத்தத்தை இப்போது திமுக கொண்டு வரும்போது அதை அறிமுக நிலையிலேயே எதிர்க்கிறது அதிமுக.

திமுக, பாஜக சொன்னதும் செய்வதும்

1993-96 வரையிலான காலகட்டத்தில் அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்த நிலையில், வேந்தர் அதிகாரம் முதல்வரிடம் இருக்கும்படி மாற்றி சட்டத்திருத்தம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. அன்று திமுக தலைவர் மு. கருணாநிதி ‘இது தேவையற்ற சட்டம்’ என்று சொன்னதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. துணைவேந்தர் நியமன சட்டத்திருத்தத்தை திமுக அரசு கொண்டு வந்த அடுத்த இரு தினங்களில் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக வலைதளங்களில் இந்தத் தகவலை உலவவிட்டார்.

“வேந்தராக முதல்வர் இருந்தால் என்ன தவறு என்றும் ஜெயலலிதா சொன்னதைக்கூட கேட்காமல் அதிமுகவினர் செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 1994 ஜனவரி 5 அன்று தமிழக சட்டப்பேரவையில் வேந்தர் பொறுப்பு இனி முதல்வருக்குத்தான் என்று சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. இந்தச் சட்டம் தேவையற்றது என்று சட்டப்பேரவையில் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று அன்றைய திமுக தலைவர் கருணாநிதி ‘நெஞ்சுக்கு நீதி’ நான்காம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1996 ஜூலை 30 அன்று இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்று அன்றைய கல்வி அமைச்சர் அன்பழகன் பேசும்போது, ‘முதல்வர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி கேள்விக்குறியாகிவிடும். பல்கலைக்கழங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குக் குந்தகம் விளைவிக்கும்’ என்று குறிப்பிட்டார். இது தேவையற்ற சட்டம் என்று கருணாநிதி சொன்னதை மீறி சட்டம் கொண்டுவந்துள்ளது நியாயமா?” என்று கேள்வி எழுப்புகிறார் நாராயணன் திருப்பதி.

நேரத்துக்கு மாறும் நிலைப்பாடு?

ஆனால், இந்த இடத்தில் பாஜக வசதியாக ஒரு விஷயத்தை மறந்துவிட்டது. தமிழக ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பது போல, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருக்கும் ஆளுநர் கமலா பெனிவாலுக்கும் இடையே பனிப்போர் இருந்தது. குறிப்பாக, லோக் ஆயுக்தா தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் மோடிக்கும் - கமலாவுக்கும் மோதல் ஏற்பட்டது. துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் மாநில அரசு பரிந்துரையையும் கமலா புறக்கணித்தார்.

இந்தச் சூழலில், 2007-ல் மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையிலான குழு பல்வேறு விஷயங்களைச் சொன்னதுடன், “துணைவேந்தர்கள் நியமனத்தில் அமைச்சரவையின் பரிந்துரையைப் புறக்கணிக்கிற வகையில் ஆளுநர் செயல்படுவது மாநில அரசோடு மோதல் போக்கை உருவாக்குகிறது” என்றும் குறிப்பிட்டது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்திதான் 2011-ல் குஜராத்தில் பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து ஆளுநர் வேந்தராக இருக்க முடியாத சூழலை மோடி உருவாக்கினார்.

பொதுவாக ஆளுநர் - முதல்வர் மோதல் ஏற்படும்போது ஆளுநருக்குப் பதிலடி கொடுக்கும் கருவியாக, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக்கொள்ளவே முயல்கிறது. 1994-ல் ஜெயலலிதாவும், 2011-ல் மோடியும் செய்ததைத்தான் இன்று ஸ்டாலினும் செய்திருக்கிறார். தங்களுக்குச் சாதகம் என்றால் ஒரு விஷயத்தை ஆதரிப்பதும், பாதகம் என்றால் எதிர்ப்பதும் அரசியல் கட்சிகளுக்குக் கைவந்த கலை. ஆனால், கடந்த காலங்களில் தங்கள் கட்சிகளின் தலைவர்கள் ஒரு விஷயத்தில் பின்பற்றிய நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் அப்படியே மாற்றிக்கொள்வது அப்பட்டமான அரசியலைத் தவிர வேறு எதுவும் இல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in