தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி: பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, 2021-ல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3.50 லட்சம் கோடியும் என ஏறத்தாழ ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4,816 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூபாய் 1,000 கோடியும், பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூபாய் 7,400 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியது. தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாராட்டுகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ.32,599 கோடியில் இருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சரியான நடவடிக்கை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று. ரூ.7,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத பகல் கனவு பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்: கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்கள் சார்ந்த, மண் சார்ந்த, மொழி சார்ந்த, விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். சமூகநீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை என்ற கொள்கை பிடிப்பில், அயோத்தி தாசர், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் இருந்துள்ளனர். அவர்களின் கொள்கையை பேச்சுக்களை தொகுத்து அச்சு டிஜிட்டல் வழியில் வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி: பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு, 21 உலக மொழிகளில் ரூ.5 கோடி செலவில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு தமிழகத்தின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை வரலாற்றை இந்தியாவெங்கும் எடுத்துச்செல்லும் சிறப்பான முயற்சி; எனது பாராட்டுக்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்: தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி வாய் திறக்காத வெற்று அறிக்கை! தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலோ அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.

Related Stories

No stories found.