
பாஜக மத்திய பணிக்குழுவை அக்கட்சியின் தலைமை மாற்றி புதிய பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழக பாஜக பொறுப்பாளராக இருந்த சி.டி.ரவி அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு வர உள்ளது. அதற்காக வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பாஜக மத்திய பணிக்குழு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான புதிய பெயர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள் கொண்ட பாஜக மத்திய பணிக்குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த சி.டி.ரவி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில் ஆண்டனி, முன்னாள் ஏ.எம்.யூ துணைத் தலைவர் தாரிக் மன்சூர் ஆகியோர் பாஜகவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமார் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான நடைபயண நிகழ்ச்சியை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மாற்றப்பட்டுள்ளது அந்தக் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.