`தமிழ் அழகான மொழி; ஆனால் கற்றுக்கொள்வது கடினம்;- செய்தியாளர்கள் சந்திப்பில் ரா`கூல்’ லக..லக!

செய்தியாளர் சந்திப்பில் ராகுல்  காந்தி
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி படம்: ஜாக்சன் ஹெர்பி

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரை நோக்கி நடந்து வருகிறார் ராகுல் காந்தி. மொத்தம் 150 நாள்களில் 3500 கிலோ மீட்டர் பயணிக்கும் ராகுல் காந்தி வழிநெடுகிலும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார். அவர்களோடு உரையாடலும் நிகழ்த்துகிறார். இந்நிலையில் தக்கலை அருகில் உள்ள புலியூர் குறிச்சி பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

படம்: ஜாக்சன் ஹெர்பி

அப்போது அவர் கொடுத்த பேட்டியில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்றுமொழிகளிலும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஒரு நிருபர் தமிழில் நீளமான கேள்வியைக் கேட்க, அதை இன்னொருவர் மொழிபெயர்க்க முயன்றார். ஆனால் மொழிபெயர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பே மைக் பிடித்த ராகுல் காந்தி, “நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் ரொம்ப அழகான மொழி. ஆனால் கற்றுக்கொள்வது கடினம்”என்றார். உடனே செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்த ராகுல் காந்தி, “நான் இந்திய ஒற்றுமைக்காகவே இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் வரவேற்கிறேன். காங்கிரஸ் அதன் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்த பயணத்தின் நோக்கமே மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களைக் கேட்பதுதான். மக்களை ஒன்று சேர்க்கவும், இந்தியாவின் ஒற்றுமைக்காகவுமே யாத்திரை மேற்கொள்கிறேன்.

நம் நாட்டில் இருக்கும் எல்லாத் துறைகளையும் மத்திய பாஜக அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமான வரி, அமலாக்கத்துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அதனால் தான் பலரும் பாஜகவோடு கைகுலுக்கி செல்ல நினைக்கின்றனர். இந்தியா பல வித கருத்தோட்டங்களைக் கொண்ட நாடு. இங்கு பாஜக ஒற்றைக் கருத்தைத் திணிக்கவே முயற்சி செய்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. இது பாஜக அரசு இயந்திரத்தை எதிர்க்கும் யாத்திரையாகி உள்ளது.

இளைஞர்கள் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். நான் இந்த யாத்திரைக்கு தலைமை ஏற்கவில்லை. மற்ற நிர்வாகிகளைப்போல நானும் பங்கேற்றுள்ளேன், நீங்கள்(ஊடகத்தினர்) எனக்கு மட்டும் அதில் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். காங்கிரஸாரையும் கடந்து ஏராளமான பொதுமக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர். நான் காங்கிரஸ் தலைவர் பதவியை மையப்படுத்தியும் இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in