மருத்துவக் கல்விக்கான பயிற்றுமொழியாக தமிழை அறிமுகப்படுத்துக: தமிழக அரசுக்கு அமித் ஷா வேண்டுகோள்

மருத்துவக் கல்விக்கான பயிற்றுமொழியாக தமிழை அறிமுகப்படுத்துக: தமிழக அரசுக்கு அமித் ஷா வேண்டுகோள்

தமிழக அரசும் மருத்துவக் கல்விக்கான பயிற்றுமொழியாக தமிழ்மொழியை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “ நான் தமிழக அரசுக்கு ஒரு ஆலோசனையை முன்வைக்கிறேன். உலகின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் இலக்கணம் உலகின் பழமையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கணங்களில் ஒன்றாகும். தமிழ் மொழியை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரப்புவது தமிழ்நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பொறுப்பு.

ஆகவே தமிழக அரசுக்கு எனது பரிந்துரை என்னவென்றால், நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை பயில மாநில மொழிகளை அறிமுகப்படுத்திவிட்டது. தமிழக அரசும் மருத்துவக் கல்விக்கான பயிற்றுமொழியாக தமிழ்மொழியை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த முன்னெடுப்பினால் தமிழ் வழியில் பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மருத்துவ அறிவியல் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கும் இது உதவும். இது, மருத்துவ படிப்புகளுக்கும், நாட்டிற்கும் பெரிய அளவில் உதவக்கூடிய ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

அதுபோல தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வியில் 1350 இடங்கள் தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஏஐசிடிஐ வழங்கிய தரவுகளின்படி 50 மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். தமிழ் மொழியின் மீது அதிக பெருமை கொண்ட ஒரு மாநிலத்திற்கு இது ஒரு ஆச்சரியமளிக்கும் செய்தி. பிற மாநிலங்களைப் போல, தமிழக அரசு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியை தமிழ் வழியில் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் அந்த மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டால் தமிழ் மொழிக்கு சேவையாக அமையும்” என்று கூறினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in