`யார் இந்த கரூர் கம்பெனி ஆட்கள்?'- கனிமவள கொள்ளையால் கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி`யார் இந்த கரூர் கம்பெனி ஆட்கள்?'- கனிமவள கொள்ளையால் கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி

’’காட்டுப்பன்றிகளின் படையெடுப்பால் விளைநிலங்கள் சேதமடைகின்றன. அதனைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக வனத்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்’’ என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மித மிஞ்சிய மழை, புயல், சூறாவளிகளால் வேளாண்மைக்கு பொருட்சேதம் ஏற்படுவதைப் போல், அண்மைக்காலமாக வனவிலங்குகளாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

குறிப்பாக காட்டுப்பன்றிகளின் பெருக்கத்தால் வனப்பகுதியைத் தாண்டி பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கரும்பு, வாழை, கடலை, காய்கறிகள், விளைச்சல்கள் அழிக்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள் படையெடுப்பதைப் போல மலைப்பகுதிக்கும் அப்பால் உள்ள நிலங்களில் நுழைந்து சேதம் விளைவிக்கின்றன.

காட்டுப் பன்றிகளை வனத்துறையினரும் தடுத்து நிறுத்தவில்லை; கூட்டம் கூட்டமாக வருவதால் விவசாயிகளாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை.கடந்த 10 வருடங்களாக காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து மலைப்பகுதி மாவட்ட விவசாயிகளால் பலமுறை முறையிட்டும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பு, கடலை, வாழை, காய்கறி தோட்டங்கள் சேதப்படுத்தப் படுவதால் ஒவ்வொரு விவசாயிக்கும் பயிரிட்டதில் பாதி அளவிற்கு கூட ’அறுவடைக்கு’ வந்து சேர்வதில்லை. எனவே, காட்டுப் பன்றி தொல்லையை தடுத்த நிறுத்த வனத்துறையினர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தைச் சுற்றி முறையான வலைக்கம்பி வேலி அமைப்பதற்கு 100% மானியம் வழங்க வேண்டும்.

கனிம வளங்கள் பறிபோவது தடுக்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது ஆட்சிக்கு வந்தது. கடந்த இரண்டு வருடத்தில் வாக்குறுதிக்கு மாறாக, வண்டல் மண், சரளை மண், செம்மண், ஆற்று மணல், ஜல்லி உட்பட கனிம வளங்கள் பெருமளவு சுரண்டப்படுகின்றன.

தமிழக கேரள எல்லைகளிலும், குறிப்பாக தென்காசி - செங்கோட்டை பகுதியிலும், கோயமுத்தூர் – வாளையாறு; பொள்ளாச்சி வழியாகவும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தினமும் கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன.

இதை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை எனில் அடுத்த மூன்று நான்கு வருடத்தில் தமிழக மக்கள் வீடு கட்டுவதற்கு ஒரு லோடு ஜல்லி அல்லது சரளை மண், செம்மண், ஆற்று மணல் எதுவும் கிடைக்காமல் போய்விடும்.

கனிம வள அதிகாரிகளின் அனுமதியில்லாமல் கரூரைச் சார்ந்த ஒரு சட்டவிரோத கும்பல் ஆங்காங்கே முகாமிட்டுக் கொண்டு, ஒரு லோடுக்கு ரூபாய் 200 முதல் 500 வரை வசூல் செய்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்திலிருந்து சொந்த பயன்பாட்டிற்கு மணல் எடுத்துச் செல்வதற்கு கூட கப்பம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.

யார் இந்த கரூர் கம்பெனி ஆட்கள்? காவல்துறை இந்த சட்டவிரோத கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மாநில அரசு ஒப்புக்காக ஏதாவது நடவடிக்கை எடுக்காமல், உடனடியாக மணல் கனிமவள கொள்ளையைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே, மதுக்கரை – மரப்பாலம் சாலை குறுகியதாகவும், அப்பகுதியில் அதிக பள்ளி, கல்லூரிகள்; அதிக வாகனப் போக்குவரத்து இருப்பதாலும், அச்சாலையில், ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தாததாலும் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கோவை புறவெளிச் சாலையை சுகுணா புரத்தில் நிறுத்தினால், மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அன்றாட பணிகளுக்குச் செல்வோரும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, அந்த முடிவைக் கைவிட்டு விட்டு, முதலில் மதுக்கரை – மரப்பாலம் சாலை, ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் ‘’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in