
தமிழக ஆளுநரை அருவருக்கத்தக்க வார்த்தையால், பேசி மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆளுநர் அலுவலகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு பேசினார். ஆளுநரின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கம் 128-வது வட்டத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநரை பற்றி அருவருக்கத்தக்க வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனையடுத்து ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா ராமசாமி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார. அதில், மாநிலத்தின் சட்டத்தின் தலைவர் ஆளுநர் மீது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அருவருக்கத்தக்க வகையில் பேசியது, கொலை மிரட்டல் விடும் தொனியில் உள்ளது. எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 என்கிற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சட்டப்பிரிவானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றுபவர்களை அவர்களது கடமையை செய்யவிடாமல் தடுத்தல், அவர் மீது அவதூறு பரப்புதல், மிரட்டல் விடுதல் என்கிற வகையில் குற்றமாகும்" என்று கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட சென்னை காவல்துறையினர் இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன் பிறகு உரிய சட்ட பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.