ஹேக்கர்கள் பிடியில் சிக்கிய தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம்: சீனா, ரஷ்யா மீது குற்றச்சாட்டு

ஹேக்கர்கள் பிடியில் சிக்கிய தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம்: சீனா, ரஷ்யா மீது குற்றச்சாட்டு

தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் சிறிது நேரம் முடக்கினர். ஆனாலும், இணையதள சேவை மீட்டெடுக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதலை தைவான் அரசு உறுதி செய்துள்ளது.

இது குறித்து தைவான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சைபர் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பல்வேறு அரசுத்துறை இணையதளங்கள், அதிபர் மாளிகை இணையதளம் ஆகியனவும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனை சீன, ரஷ்ய ஹேக்கர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கடந்த வாரம் போனில் நீண்ட நேரம் பேசினர். அப்போது தைவான் மீதான அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தைவானின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மாற்றும் முயற்சிகளில் சீனா ஈடுபட வேண்டாம் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சீன அதிபர், “நெருப்புடன் விளையாட வேண்டாம். நெருப்புடன் விளையாடுபவர்கள் அதனால் அழிக்கப்படுவர். தைவானின் சுதந்திரத்தையும், அதில் வெளிநாடுகளின் தலையீட்டையும் சீனா வன்மையாக எதிர்க்கிறது” என தெரிவித்தார்.

இந்தச் சூழலில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து சென்றார். இதையடுத்து சீனா - அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானைச் சுற்றி அமெரிக்க, சீன போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நான்சி பெலோசியின் வருகை உறுதியானது தொட்டே தைவான் மீது சைபர் போர் தொடங்கிவிட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in