சின்னம் பிரச்சினையால் சின்னாபின்னமாகும் அரசியல் கட்சிகள்!

திருமாவளவன் சீமான் வைகோ
திருமாவளவன் சீமான் வைகோ

தமிழகத்தில் இந்த தேர்தலில் சின்னம் வாங்குவதற்கான போராட்டத்தில் சிக்கி பல கட்சிகள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி, மதிமுக, விசிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு இந்த தேர்தலில் அவர்கள் கேட்ட சின்னங்கள் கிடைக்கவில்லை. இதைவைத்து, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் ஆத்திரத்தைக் கொட்டுகின்றன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அவர்களின் சின்னங்கள் நிரந்தரமாக இருக்கும். ஆனால், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தே ஒவ்வொரு தேர்தலுக்கும் சின்னங்களை பெறவேண்டும். ஒரு அரசியல் கட்சிக்கு தொடர்ந்து இரண்டு தேர்தல்களுக்கு ஒரு பொதுசின்னம் ஒதுக்கப்படும். அதற்கு அடுத்த தேர்தலில் அவர்கள் அந்த சின்னத்தைப் பெற, முந்தைய தேர்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல நடப்பு தேர்தலில், அது மக்களவை தேர்தல் என்றால் ஒரே மாநிலத்தில் குறைந்தது இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும். வரவு செலவு அறிக்கைகளை முறையாக தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் எல்லாம் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளிடம் மட்டுமே பார்க்கப்படுகிறது என்றும், பாஜகவை ஆதரிக்கும் கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னங்களை கேட்ட மாத்திரத்தில் தேர்தல் ஆணையம் வழங்குகிறது என்றும் புகார் தெரிவிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

சீமான் - கரும்பு விவசாயி சின்னம்
சீமான் - கரும்பு விவசாயி சின்னம்

தமிழ்நாட்டில் சின்னம் பிரச்சினை முதலில் வெடித்தது நாம் தமிழர் கட்சியிடமிருந்துதான். அவர்கள் இந்த மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து சுவர் விளம்பரம், போஸ்டர்கள் வரை அடித்து வைத்திருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை திடீரென கர்நாடகாவைச் சேர்ந்த ‘பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி’ என்ற கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சி தாமதமாக விண்ணப்பித்தது என்ற காரணத்தைச் சொல்லி கரும்பு விவசாயி சின்னத்தைக் கொடுக்க மறுத்தது ஆணையம். உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று பார்த்தும் நாம் தமிழருக்கு கடைசியில் ‘ஒலிவாங்கி’ சின்னம்தான் கிடைத்தது. இத்தனைக்கும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு 6.58 சதவீதம் வாக்குகள் வாங்கியிருந்தது.

அடுத்ததாக மதிமுக தங்களின் பிரத்யேக பம்பர சின்னத்தை கேட்டுப்பார்த்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடு வோருக்கு சின்னம் வழங்க முடியாது என கைவிரித்து விட்டது தேர்தல் ஆணையம். புதிய தமிழகம் கட்சிக்கும் இதே காரணத்துக்காக ‘தொலைக்காட்சிப் பெட்டி’ சின்னத்தை ஒதுக்கமுடியாது என ஒதுங்கிக்கொண்டது ஆணையம்.

அதேசமயம், இரண்டு தொகுதியில் போட்டியிடும் விசிகவுக்கும் பானை சின்னம் மறுக்கப்பட்டது. ஏனென்றால், அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் பானை சின்னத்தில் வென்றாலும் 0.99 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்கள் என காரணம் சொல்லப்பட்டது. அதாவது 1 சதவீதத்துக்கு 0.01 சதவீதம் குறைவாக பெற்றுள்ளார்கள். அதேபோல வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் காரணம் சொல்கிறது தேர்தல் ஆணையம். ஆனாலும் பானை சின்னத்துக்காக விசிக இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறது.

விசிக பானை சின்னம்
விசிக பானை சின்னம்

இதுபோன்ற சூழலில்தான் தமாகாவுக்கு எப்படி சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டது என்றும், அமமுகவுக்கு எப்படி குக்கர் சின்னம் கிட்டியது என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே இந்தக் கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் கேட்டவுடன் கிடைத்திருப்பதாக புகார் வாசிக்கிறார்கள். அதேசமயம், பாஜகவுக்கு எதிரணியில் உள்ள கட்சிகளுக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கழித்துக்கட்டும் வேலையை தேர்தல் ஆணையம் செய்கிறது என்றும் புலம்புகிறார்கள்.

பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் தேர்தல் சின்னங்களை பெறும் விதிமுறைகளில் எதனை கோட்டைவிட்டுள்ளார்கள் என தோண்டித்துருவி கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்க்கும் தேர்தல் ஆணையம், பாஜகவை ஆதரிக்கும் கட்சிகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி அவர்கள் கேட்ட சின்னத்தை கொடுக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் திருத்தமாக குற்றம்சாட்டுகின்றன.

அதேசமயம், “தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு. அதில் தேர்தல் சின்னங்கள் தொடர்பாக ஏற்கெனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சூழலுக்கு ஏற்ப அதில் சில திருத்தங்கள் மற்றும் புதிய விதிகளும் சேர்க்கப்படுகின்றன. அது தொடர்பான பொது அறிவிப்புகளும் செய்யப்படுகிறது. தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே இவை குறித்த அறிவிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்கையில் தாமதமாக விண்ணப்பம் செய்வது, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யாதது, குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாதது போன்ற காரணத்துக்காகவே சில அரசியல் கட்சிகளில் சின்னம் தொடர்பான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இதில் எந்த விதிமீறல்களும் நடக்க வாய்ப்பே இல்லை” என்று விளக்கம் அளிக்கிறது தேர்தல் ஆணைத்தின் தரப்பு.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலின் தங்கள் பலத்தை நிரூபிக்க சின்னம் என்பது அவசியமாகும். அதுவும் கடந்த தேர்தலில் மக்களிடம் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சின்னமே இம்முறையும் ஒதுக்கப்பட்டால் தங்களால் மக்களை எளிதில் ஈர்க்கமுடியும் என நினைக்கின்றன சிறிய கட்சிகள். அப்படி இருக்கையில் அந்தக் கட்சிகளை வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்புவரை சின்னத்துக்காக அலையவிட்டால் அது எப்படி நல்ல ஜனநாயகத்துக்கு அழகாகும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆயுதங்களை பிடுங்கிக்கொண்டு போர்க்களத்துக்கு அனுப்புவது போல சிறிய கட்சிகளுக்கு கேட்ட சின்னங்களை ஒதுக்காமல் தேர்தல் களத்தில் மோதச் சொல்கிறது தேர்தல் ஆணையம். இப்படி எல்லாம் நெருக்கடி கொடுத்தால் எப்படி மாற்றத்தை விரும்பும் சாதாரண பின்புலம் கொண்ட கட்சிகள் உருவெடுக்க முடியும் என்ற கேள்வியை அத்தனை எளிதில் ஒதுக்கித்தள்ள முடியவில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in