சுயசரிதை நூலால் மீண்டும் புயல் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ்: கேரள அரசியல்வாதிகள் பீதி

சுயசரிதை நூலால் மீண்டும் புயல் கிளப்பிய  ஸ்வப்னா சுரேஷ்:  கேரள அரசியல்வாதிகள் பீதி

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கேரள அரசியலை கதிகலக்கிய பெயர்களில் ஒன்று ஸ்வப்னா சுரேஷ். தங்கக்கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ். கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பியவர்.

கடந்த 2020-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்டவர் தான் இந்த ஸ்வப்னா சுரேஷ். இவ்வழக்கில் முன்னாள் கேரள அமைச்சர் உள்பட முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாக கூறப்படுகறிது. இவ்வழக்கு தொடர்பாக சுங்க துறை, என்ஐஏ. மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தின.

இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை மீண்டும் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐஏஎஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குச்சாட்டுகள் இடம் பெற்று உள்ளன.

இப்புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளதாவது: கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன்.

ஆட்சி மாறினால் இந்த வழக்கின் விசாரணையின் போக்குமாறும் என்றும், என்னைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான் இவ்வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து ஆடியோவை பதிவு செய்தனர்கள்.

முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ். அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து எனக்கு தாலி கட்டி இரண்டவாது திருமணம் செய்து கொண்டார். அப்போது ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் இரண்டு பேரும் கைதான பிறகு முதன் முதலாக என்ஐஏ. அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்தபோது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது. நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சரும், கேரள சட்டப்பேரவையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை தனிமையில் இருக்க ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால், அதற்கு நான் உடன்படவில்லை. இதுதொடர்பாக எனக்கு பலமுறை அவர் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கொடுத்துவிட்டேன் என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தில் இன்னும் பலர் குறித்து ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ள பகீர் கருத்துக்கள் கேரள அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in