`பாஜக என்னை அழைத்தால் கட்சிக்கு நல்லது; இல்லையென்றால் எனக்கு நஷ்டமில்லை’- எஸ்.வி.சேகர் தடாலடி!

`பாஜக என்னை அழைத்தால் கட்சிக்கு நல்லது; இல்லையென்றால் எனக்கு நஷ்டமில்லை’- எஸ்.வி.சேகர் தடாலடி!

``பாஜக என்னை அழைத்தால் கட்சிக்கு நல்லது. இல்லையென்றால் எனக்கு நஷ்டமில்லை'' என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக எனத் தீவிர அரசியலில் வலம் வந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். பெண் பத்திரிகையாளர்கள் மீது தரம் தாழ்ந்த விமர்சனம் வைத்த காரணத்தால் அவர் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனம் வைத்தனர். அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இதையடுத்து தீவிர அரசியலிலிருந்து அவர் விலகி இருந்தார். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய எஸ்.வி.சேகர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகர், “அரசியலில் நான் மௌன விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறேன். நான் சார்ந்த கட்சி எனக்கு உண்டான அங்கீகாரத்தைக் கொடுக்கிற வரைக்கும் நான் அமைதியாக இருப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன். ஒரு நடிகனாகக் கலைஞனாக எல்லாருக்கும் பொதுவானவனாக இருப்பது சிறந்த விஷயம். ஏனென்றால் நாம் ஒரு கட்சியைச் சார்ந்து பேசும் போது, நமக்கு ஒரு பிரச்சினை வந்தால் அந்த கட்சி பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அது பாதுகாப்பு கொடுக்கும் வரை வெயிட் பண்ண வேண்டும்.

1990லிருந்தே நான் பாஜக அனுதாபியாக இருந்தேன். 2004-ல் ஜெயலலிதா அழைத்ததால் அதிமுகவில் இணைந்தேன். பிறகு அவங்களே என்னை 2008-ல் வெளியேற்றிவிட்டார்கள். 2013லிருந்து பாஜகவில் சேர்ந்து உறுப்பினராக இருக்கிறேன். அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு உண்டான ஒத்துழைப்பை நிர்வாகிகள் கொடுத்தால் சிறந்த பலனை அவர் கொடுக்க முடியும். ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும். தனிப்பட்ட எந்த ஒரு நபருமே மிகப் பெரிய அமைப்பில் வெற்றி பெறுவது என்பது கஷ்டம். கட்சி என்னை அழைத்தால் கட்சிக்கு நல்லது. அழைக்க வில்லை என்றால் எனக்கு நஷ்டமில்லை” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in