தமிழ்நாட்டில் இனி திமுக இருக்காது - திருச்சி சிவா எம்.பி. மகன் அதிரடி!

தமிழ்நாட்டில் இனி திமுக இருக்காது -  திருச்சி சிவா எம்.பி. மகன் அதிரடி!
சூர்யா சிவா

இனி தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சியே இருக்காது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தெரிவித்தார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் காதல் திருமணம் செய்து கொண்டது உட்பட பல்வேறு காரணங்களால் அவரது தந்தை திருச்சி சிவாவிடம் உறவு சுமுகமாக இல்லை. மனைவி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் பாஜகவுக்கு செல்லப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனையடுத்து சூர்யாவிடம் பேசினோம்.

நீங்கள் பாஜகவில் சேரப்போவதாக சொல்கிறார்களே?

ஆமாம், உண்மைதான். மே 10-ம் தேதி மதுரை வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து அவர் முன்னிலையில் பாஜகவில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

திமுகவை விட்டு விலக என்ன காரணம்?

15 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வருகிறேன். இதுவரை எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை; அடையாளமும் கிடைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் இவன் கனிமொழி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி ஓரம்கட்டுகிறார்கள். இதற்கு மேலும் இந்த கட்சியில் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்பதால் திமுகவை விட்டு வெளியேறுகிறேன்.

அதற்காக பாஜகவை தேர்ந்தெடுத்தது ஏன்?

அந்தக் கட்சி தான் இந்தியாவை ஆள்கிறது. அந்த கட்சிதான் இந்தியாவை வலிமையாக்கி வருகிறது. இந்தியாவை வளப்படுத்தி வருகிறது. இனி தமிழ்நாட்டிலும் அந்த கட்சிதான் வளரும், அந்த கட்சி மட்டும் தான் இருக்கும். அதனால் பாஜகவில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் திமுக, அதிமுக தானே பிரதானக் கட்சிகள்..?

உண்மைதான். ஆனால், இனி திமுக வளராது. தமிழ்நாட்டில் அந்தக் கட்சி இல்லாமல் போகும். தேர்தலுக்காக நாடகமாடுகிற கட்சி அது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அந்த கட்சி எதையுமே செய்யவில்லை, இனி செய்யப் போவதுமில்லை. கட்சியின் தலைவர் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்.

இத்தனை நாளும் உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா?

கட்சியில் இருக்கும்போது அதையெல்லாம் சுட்டிக்காட்ட முடியாது. எப்படியும் நமக்குரிய அடையாளத்தைத் தருவார்கள் என்று இதுவரை காத்திருந்தேன். அதற்கு எனது தந்தையே முட்டுக்கட்டையாக இருக்கிறார். அதைத் தாண்டி போனால் இவன் கனிமொழி ஆதரவாளர் என்று சொல்கிறார்கள். இப்படி அங்கீகாரம் இல்லாமல் அங்கு இருப்பதை விட கட்சியை விட்டுப் போவதே மேல் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

அது மட்டுமில்லாமல் சர்வாதிகாரம் தலைதூக்கி இருப்பதுடன் மட்டுமல்லாது திமுக இப்போது பாலியல் குற்றவாளிகளாலும் நிரம்பியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை வைத்து பெரிதாக அரசியல் செய்தார்கள். ஆனால், இவர்கள் கட்சியினர் நடத்தும் பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்களைக் கண்டு கொள்வதே இல்லை.

நீங்கள் யாரை கூறுகிறீர்கள்?

அமைச்சர் பெரியகருப்பன், தமிழன் பிரசன்னா உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலரின் மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதில் எனது தந்தையையும் சேர்த்துதான் சொல்கிறேன். சசிகலா புஷ்பாவுடன் எனது தந்தை இருந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டது என்று சொல்லுகிறார்கள். இல்லை அவையெல்லாம் உண்மையிலேயே எடுக்கப்பட்ட படங்கள்தான்.

அந்த படங்கள் வெளியான நிலையில் சசிகலா புஷ்பாவை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து ஜெயலலிதாவும், சசிகலாவும் அடித்தார்கள். கட்சியை விட்டு நீக்கினார்கள். அப்படி அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரான என்னுடைய தந்தையின் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவருக்கு அடுத்த முறையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தான் பரிசாக அளிக்கப்பட்டது இப்படிப்பட்ட கட்சிதான் திமுக.

திருச்சி சிவா
திருச்சி சிவா

தந்தை மீது இப்படி பயங்கரமாக குற்றம் சாட்டுகிறீர்களே?

நான் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாக இருக்கிறேன். அவர் எதையும் கண்டுகொள்வதில்லை. கட்சியிலும் எனக்கான இடத்தை பெற்றுத் தரவில்லை. பிறகென்ன தந்தை மகன் உறவு? அவர் திமுககாரர். இனி நான் பாஜககாரன் அவ்வளவுதான்.

திமுகவில் இதுவரை நான் கனிமொழி ஆதரவாளனாக இருந்தேன். அந்த கனிமொழியை நான் ஏதாவது குற்றம் சொல்கிறேனா? இல்லையே. அவர் நல்லவர், திறமையானவர். சொல்லப் போனால் எதிர்காலத்தில் திமுகவை அவர்தான் வழி நடத்தப் போகிறார் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். திமுகவில் அதற்கு தகுதியானவர் அவர் ஒருவர்தான்.

இவ்வாறு சூர்யா சிவா நமக்கு பேட்டியளித்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க பல முக்கிய தலைகளை அக்கட்சியில் இணைக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவின் கொள்கைகளுக்காக டெல்லி வரையிலும் களமாடும் செயல்வீரரான திருச்சி சிவாவின் மகனையே பாஜகவுக்கு கொண்டுவந்து திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது தமிழக பாஜக.

Related Stories

No stories found.