சூர்யா சிவா பதவி நீக்கம்; தொண்டராகச் செயல்படலாம் என அண்ணாமலை அறிவிப்பு!

சூர்யா சிவா
சூர்யா சிவா

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு நீக்கப்படுகிறார் என்றும் கட்சியின் ஒரு தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் ஆபாசமாக வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் குழு முன்பு இன்று ஆஜராகினர்.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்பாது, சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி என்று டெய்சியும், டெய்சி எனக்கு அக்கா மாதிரி என சூர்யா சிவாவும் கூறியிருந்தனர். இனி சுமுகமாக தொடருவோம் என்றும் டெய்சி, சூர்யா ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த நிலையில், பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா 6 மாத காலத்திற்கு அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கிவைக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ற வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவரும் சுமூகமாகச் செல்ல விரும்பினாலும் தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சுமூகமாகச் சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனால் பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டராக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in