ஆபாசம், மிரட்டல் விவகாரத்தில் நடந்தது என்ன?- விளக்கம் அளித்தனர் சூர்யா சிவா, டெய்ஸி சரண்

சூர்யா சிவா
சூர்யா சிவா

மருத்துவர் டெய்ஸி  சரணிடம் அலைபேசியில் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய குற்றச்சாட்டில்  பாஜக  விசாரணைக் குழுவிடம் இன்று திருச்சி சூர்யா சிவா  நேரில் ஆஜராகி  விளக்கம்  அளித்தார்.  டெய்ஸி சரணும் வந்திருந்து தனது தரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தமிழக பாஜகவின் சிறுபான்மை அணி மாநிலத் தலைவி டெய்ஸி சரணிடம்  அக்கட்சியின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மிக ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் கொலை மிரடடல் விடுத்தும்  அந்த ஆடியோவில் சூர்யா சிவா பேசியிருந்தார்.  இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. 

ஆடியோ வெளியானதுமே இது பற்றி விசாரிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  குழு ஒன்றை அமைத்தார். அத்துடன் விசாரணை முடியும் வரை கட்சி நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.  இந்த நிலையில்  சூர்யா சிவாவை  கட்சியை விட்டு நீக்க வேண்டும், அவர் மீது  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிய கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் ஆறு மாதங்களுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  

பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த  விசாரணை குழுவுக்கு தலைவராக பாஜகவின் துணைத் தலைவர் கனகசபாபதி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சூர்யா சிவா  திருப்பூரில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல  டெய்ஸி சரணும் வந்திருந்து தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்தார். இவர்களின் விளக்கம் கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர் இதன்மீது உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in