உடனடியாக நாடுதிரும்பி சரணடையுங்கள், இல்லையேல் உங்கள் குடும்பத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.தேவகவுடா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்.பியும், நடந்து முடிந்த தேர்தலின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் மற்றும் புளூ கார்னர் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பிரஜ்வல் ரேவண்ணா குறித்த வீடியோக்கள் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில், அவர் இன்னும் கைது செய்யப்படாதது பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து தலைமறைவாகவே இருப்பது தேவகவுடா குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. எனவே பிரஜ்வல் உடனே நாடுதிரும்பி சரணடைய வேண்டும் என அவரின் சித்தப்பா குமாரசாமி சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சூழலில் தேவகவுடாவும் தனது பேரனுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"மே 18 அன்று நான் கோயிலுக்கு பூஜை செய்யச் சென்றபோது பிரஜ்வல் ரேவண்ணாவைப் பற்றி ஊடகங்களிடம் பேசினேன். அவர் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், எனது சகாக்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி மற்றும் வலியிலிருந்து மீள்வதற்கு எனக்கு சிறிது நேரம் பிடித்தது. எனது மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, இந்த பாலியல் குற்றச்சாட்டு வெடித்த நாளில் இருந்து, அவருக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து வருகிறார்.
இந்த நேரத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த எச்சரிக்கையை அவர் கவனிக்கவில்லை என்றால், அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக்கொள்ளும்.
ஆனால் அவர் என் கோபத்தையும், என் குடும்பத்தினரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும். குடும்பத்தாரின் பேச்சைக் கேட்கவில்லையெனில் அவர் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படுவார். என்மீது அவருக்கு மரியாதை இருந்தால் அவர் உடனே நாடு திரும்பி சரணடைய வேண்டும்” என அவர் அந்த கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!
வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!
மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!