`எந்த இடங்களுக்கும் செல்லலாம்'- ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனையை தளர்த்தியது உச்ச நீதிமன்றம்

`எந்த இடங்களுக்கும் செல்லலாம்'- ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனையை தளர்த்தியது உச்ச நீதிமன்றம்

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை உச்ச நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். தொடர்ந்து பல நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணை அமைப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விருதுநகரை விட்டு வெளி ஊர்களுக்கு எங்கும் செல்ல கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனிடையே, நிபந்தனையை தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் நிபந்தனையை தளர்த்திய உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in