
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ’ஏன் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ என ஆளுநரின் செயலாளர் மற்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட13 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவற்றுக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிட வேண்டும்.
மேலும், சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அரசியல் போட்டியாக ஆளுநர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் என்று அரசு கூறியது. ஆளுநரின் செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருக்கிறது. குடிமக்களின் ஆணையை ஆளுநர் தட்டிக்கழிக்கிறார் என மனுவில் கூறப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘’2020ம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கிடப்பில் போட்டு வைத்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார்.
சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளை கூட தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இது அரசின் உரிமைகளை பறிக்கும் விஷயம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம்’’ என வாதிட்டார்.
வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசு தொடர்ந்து இருக்கக்கூடிய வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கருத்து தெரிவித்த அவர், ஏன் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் என ஆளுநரின் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை வரும் 24ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!