`ரத்து செய்ய முடியாது; விசாரணைக்குத் தடையில்லை'- எஸ்.பி வேலுமணிக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

`ரத்து செய்ய முடியாது; விசாரணைக்குத் தடையில்லை'- எஸ்.பி வேலுமணிக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என்றும் அவருக்கு முதல் கட்ட விசாரணை அறிக்கையைக் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. மாநகராட்சி மற்றும் நகராட்சி டெண்டர் விவகாரங்களில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடான வகையில் டெண்டர் ஒதுக்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், “தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர், எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை நடத்தி அதன் குற்றப்பத்திரிகையை பத்து வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்“ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எஸ்பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்க தற்போதுள்ள திமுக அரசு முயன்று வருகிறது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க வேண்டும். மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாமல் இருந்ததால், தனது மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தரப்பில் மனு செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, “எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது. டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை. முதல் கட்ட விசாரணை அறிக்கையை எஸ்.பி. வேலுமணியிடம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in