தென்னிந்தியா பயன்பெறுவதற்காக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற, ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அந்த உரையில், “நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்து விட்டவை. அதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் கொட்டி கிடக்கின்றன. வள்ளுவரும், இளங்கோவடிகளும் புறநானூறு புலவர்கள் பலரும் நீதியின் மேன்மையைப் பற்றியும், செங்கோல் வழுவாமையின் சிறப்பினைப் பற்றியும் எப்போதும் உயர்த்திப் பிடித்துள்ளார்கள். இந்த அரசு அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது

இந்த அரசு பொறுப்பேற்ற மே மாதம் 2021 முதல் மூன்று கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், ஆறு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 35 புதிய நீதிமன்றங்கள், 54 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

புதிதாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுதல், குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டிடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்நாடு அரசு 2021 - 22 மற்றும் 2022 - 23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 268.97 கோடி ரூபாய் ஒப்பளிப்பு தந்திருக்கிறது. கீழமை நீதிமன்றங்களுக்கு பல்வேறு நிலையிலான 155 பணியாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை நீதிமன்றம், மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் கிழமை நீதிமன்றங்களுக்கு கணினி மற்றும் கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மொத்தம் ரூ.11.63 கோடி ஒப்பளித்துள்ளது

சில கோரிக்கைகளை தமிழ்நாட்டின் சார்பாக, இங்கு வருகை புரிந்திருக்கும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலாவதாக, தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்க வேண்டும். இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும். மூன்றாவதாக, நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் அமைய வேண்டும். இவற்றை இங்கு வருகை புரிந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் கனிவுடன் பரிசளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, வி.சுப்ரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in