உச்ச நீதிமன்றக்கிளை சென்னையில் அமைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றக்கிளை சென்னையில் அமைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய விழாவில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஸ்ரா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பெரியார் முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்குச் சுயமரியாதை இயக்கம் என்றுதான் பெயர் சூட்டினார். சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உயிரிலும் மேலானது. மனித உரிமைக்கு அடித்தளமானதும் சுயமரியாதைதான். சுயமரியாதை தன்மானம் மனித நேயம், மனித உரிமைகள் ஆகிய அனைத்தும் ஒரு பொருளைத் தரக்கூடிய வெவ்வேறு சொற்கள்தான்.

அதனால்தான் தனி மனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும், ஒரு இனத்தின் தன்மானமாக இருந்தாலும், மானுட கூட்டத்தின் உரிமைகளாக இருந்தாலும் அவை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியல் அமைப்பு சட்டம் சொல்வதும் இதுதான்.

சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எண்ணங்களை வெளியிடக்கூடிய உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்து உரிமை என பல்வேறு உரிமைகளை அரசியல் சட்டம் சொல்கிறது. அத்தகைய கடமையிலிருந்து நாங்கள் ஒரு நாளும் கடமை தவற மாட்டோம். உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை இங்கு வந்திருக்கும் நீதியரசர்களிடம் தற்போது வலியுறுத்துகிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in