ஈபிஎஸ்-க்கு எதிரான ஊழல் வழக்கு... விறுவிறுப்பு காட்டும் தமிழக அரசு: விரைந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

ஈபிஎஸ்-க்கு எதிரான ஊழல் வழக்கு... விறுவிறுப்பு காட்டும் தமிழக அரசு: விரைந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம், தற்போது அந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.

2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை சேகர் ரெட்டி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களான சி.சுப்பிரமணியம், சந்திரகாந்த், ராமலிங்கம், செய்யாதுரை ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடைந்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினர்களான ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு 4,833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு விசாரணை நடைபெறாமல் கிடப்பில் கிடந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் இடைக்காலத் தடை இருப்பதால் விசாரணை நடைபெறாமலே இருக்கிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தக் கோரி தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித்குமார் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விரைந்து விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in