`போராட்டத்துக்கு ஆதரவு, ஆனால் பஸ் ஓடும்'

சொல்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்
`போராட்டத்துக்கு ஆதரவு, ஆனால் பஸ் ஓடும்'

மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடக்கும் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். நாங்களும் ஆதரிக்கிறோம். ஆனால், பேருந்துகள் ஓடும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், ``பெட்ரோல், டீசல் மொத்த கொள்முதல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்து கழகத்துக்குப் பாதிப்பு இல்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் நேரடியாக சில்லறை விற்பனை விலையில் டீசல் கொள்முதல் செய்து நிரப்பப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு மாதத்துக்கு மூன்றரை கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆங்காங்கே உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கே சென்று பேருந்துகள் டீசல் நிரப்பியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முதல்வரின் நடவடிக்கையால் அந்தச் சிரமங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகள் வருகை 40 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது 62 சதவிகித பெண்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தின் வெற்றியால், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் வாக்கு அதிகளவில் திமுகவுக்கு கிடைத்துள்ளது. தற்போதைய நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு போக்குவரத்துத்துறை, போலீஸார் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

"பள்ளி நேரத்தில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுவதே படிக்கட்டுப் பயணத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறதே?" என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "தவறான தகவல். தமிழக கிராமப்புறங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 18 ஆயிரத்து 177 பேருந்துகள் இயக்கப்படுகின்றன" என்றார்.

"மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஓடாது என்கிறார்களே?" என்ற கேள்விக்கு, "அந்தப் போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். நாங்களும் (திமுக தொழிற்சங்கம்) ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும். 2 நாட்களும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in